Saturday, February 21, 2015

அயோத்திதாச பண்டிதரும் ஒரு சாதீ தமிழ் தேசிய வெறியனும்


                                                                          நேற்று பட்டையும் கொட்டையுமாக நின்று கொண்டிருந்த ஒரு தமிழ் தேசிய சாதி வெறியரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அந்த அண்ணன் அயோத்திதாச பண்டிதரை உச்சி மோர்ந்து கொண்டிருந்தார். அடடா ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருத்தர் பூர்வ தமிழ் குடியை சேர்ந்த ஐயா அயோத்திதாச பண்டிதரை தூக்கி பிடிக்கிறார்களே , பரவாயில்லையே நல்ல முன்னேற்றம் தானே என்று எண்ணிக் கொண்டு . அண்ணே ஐயா அயோத்திதாச பண்டிதரை பற்றி உங்களுக்கு தெரிந்த விசயங்களை சொல்லுங்க நானும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். அவரும் "தம்பி அயோத்திதாச பண்டிதர் மிகப்பெரிய அறிவாளி இந்த திராவிட இயக்கத்தவர்கள் அவர் புகழை மறைத்து விட்டாங்க. சக்கிலியர்களை தமிழர்கள் இல்லை என்று ஆய்வு செய்து அறிவித்தவர் அவர் தான். சக்கிலியர்கள் தங்களை தாங்களே தாழ்த்தி கொள்பவர்கள் அசுத்தமானவர்கள் அவர்களுக்கு என்று வரலாறு கிடையாது. குடிகாரகள் அவர்களை திருத்துவது கடினமான வேலை என்று ஆய்வு செய்து கண்டறிந்தவர்" என்று முடித்ததும் எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது . ஒரு நாழிகை சுதாரித்து அண்ணன் எதை நோக்கி போகிறார் என்பதை புரிந்து கொண்டு, பதிலுக்கு நான் "அண்ணே அவர் அப்படி சொன்னாரா என்பது எனக்கு தெரியாது (அதைப்பற்றிய விவரங்கள் யாருக்கேனும் தெரிந்தால் எம்மோடு பகிர்ந்து கொள்ளவும்) , ஆனால் எனக்கு சில விசயங்கள் தெரியும் , தமிழர்களுக்கும் பௌத்தத்திற்கும் உள்ள வரலாற்று தொடர்பை வெளிக்கொண்டு வந்ததும் , பார்ப்பனிய இந்துத்துவ ஆபாச குப்பைகளை தமிழில் மொழி பெயர்த்ததும் அவர் தான் என்பது உங்களுக்கு தெரியுமா , அது மட்டுமல்ல இந்தியாவில் மறைந்து போன "பாலி" மொழியில் பண்டித்துவம் பெற்றவர் என்பதும் அதற்கு ஒப்பிலக்கணம் எழுதிய மிகப்பெரிய அறிஞர் என்பதும் சமசுகிருதத்தில் புகுந்து விளையாடியவர் என்பதும் உங்களுக்கு தெரியுமா ?

சமசு கிருதத்தில் இருந்த ஆபாச குப்பைகளை அவர் மொழி பெயர்த்து கொடுத்ததை வைத்து தான் ஐயா பெரியார் அந்த ஆபாச புரட்டுகளை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார் என்பது தெரியுமா ?, அதை பற்றிய தகவல்களையும் அனைத்து தமிழர்களிடம் எடுத்து சொல்லலாமே" என்றேன் . அண்ணன் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தார்...

அயோத்திதாசரின் பெயரை பயன்படுத்தி அருந்ததியர்களுக்கு எதிராக பறையர்களுக்கு கொம்பு சீவி விட்டு அவர்கள் இருவரையும் அடிபோட வைத்து விட்டு, அப்படியே திண்ணியத்தில் நாயுடுவோடு சேர்ந்து கொண்டு பறையர்களின் வாயில் மலத்தை திணித்து விட்டு வெளியே வந்து வடுக திராவிட வந்தேறியே என்று கூச்சல் இட்டுக் கொண்டு திரிவது என்று பட்டையும் கொட்டையுமாக திரியும் நம்ம சாதீ தமிழ் தேசியர்கள் என்னத்தான் நடித்தாலும் பல்லிளிக்கும் போது அவர்களது சாதீய பார்ப்பனிய கோரப்பற்கள் அவர்களை காட்டி கொடுத்து விடுகிறது

https://www.facebook.com/anthony.fernando.796/posts/766060650144899?notif_t=like

Thursday, February 12, 2015

புத்திசாலிகள் உணர்ந்து தெரியும் சங்கதிகள்



எதிரியை பேசவிட்டு துரோகியின் கோவணத்தை உருவுவதில் புத்திசாலிகள் கை தேர்ந்தவர்கள்.

அணைக்கும் போது எல்லாரும் தெரியுறது மாதிரி அணைத்து.... அடிக்கும் போது யாருக்கும் தெரியாமல் சோலியை முடிப்பவன் புத்திசாலி

வாள் வீச்சில் தேர்ந்தவனுடைய வாள் அதன் உறையை விட்டு அடிக்கடி எம்பி குதிப்பதில்லை என்பதை உணர்ந்தோர் புத்திசாலிகள்.

ஓவ்வொரு போரின் வெற்றியும் தோல்வியும் களத்தில் தீர்மானிக்கபடுவதை விட
உளவியல் தளத்தில் தான் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மை உணர்ந்தோன் புத்திசாலி

எதிரிக்கு தன் மேல் இருக்கிற பயம் தான் தன்னுடைய பலம்
என்பதை உணர்ந்தோன் புத்திசாலி

அடக்கி ஒடுக்கப்பட்டவனின் மீதான வன்முறை சமநிலைப்படும்போது அமைதி திரும்பி விடும் என்பான் புத்திசாலி .

ஆயுதங்களால் ஏற்படுத்தப்படும் வன்முறைகளை விட அதை ரசித்து மகிழும் மனதில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் அபாயகரமானவை


திக்கற்றோர் மீது கட்டவிழ்த்து விடப்படுகிற வன்முறைகளை விட அதை அமைதியாக கடந்து செல்கிற மவுனம் தான் கொடூரமானது

விடுதலைக்கான போராட்டம் என்பது பாதுகாப்பை தேடி ஓடுவதில்லை
. தனக்கான பாதுகாப்பை தானே உருவாக்கி கொள்வது தான் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்

மானங்கெட்ட சொந்த ரத்தத்தோடு மாரடித்து நேரத்தை சாகடிப்பதை விட எதிரியோடு சண்டையிட்டு மாய்வது மேல் என்பார்கள் புத்திசாலிகள .

உறவுகளை பணத்தை கொண்டு கட்டி எழுப்பி விடலாம் என்றெண்ணுவதும் ஒருவகையில் விபச்சாரம என்பது புத்திசாலிகள் அறியாததல்ல .

சகிப்புத்தன்மை என்பது மதங்களில் காணப்படும் குப்பைகளை எல்லாம் மலை போல் ஓன்று சேர்த்து அதன் மேல் குந்தி இருப்பதல்ல . சக மனிதனை வெறுக்க சொல்லும் மிருகக் கோட்பாடுகளை தீயிட்டு கொழுத்துவதில் அடங்கி இருக்கிறது. என்பதறிந்தோர் புத்திசாலிகள்

அக்கறையோடு பேசுபவர்களிடம் "உன் வேலையை பார்” என்று சொல்பவர்களிடம்  அக்கப்போர் செய்வது நம்முடைய சுயமரியாதையின் மேல் நாமே மண்ணள்ளி போடுவதற்கு சமம் என்பதை உணர்ந்தோர் புத்திசாலிகள்.

நம்மை நாமே தனிமைப்படுத்துவதை தவிர கொடூரமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது என்பது புத்திசாலிகளுக்கு தெரியாத ஒன்றல்ல.

நாம் யார் என்பதை விட நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது தான் வரலாற்றில் நமக்கான இடத்தை தீர்மானிக்கிறது என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்


நீ யார் என்பதை விட நீ எப்படி செயல்படுகிறாய் என்பது தான் வரலாற்றில் உனக்கான இடத்தை தீர்மானிக்கிறது என்பான் புத்திசாலி.


தேடுதலில் ஈடுபாட்டோடு இயங்க ஆரம்பிப்பவன் கற்றுக் கொடுப்பவருக்கே குரு ஆகி விடுவான் என்பதறிந்தோர் புத்திசாலிகள்

எழுத்துக்களை விட உயிர்ப்போடு இருக்கும் குரல்களின் வீச்சு அதிகம் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள். அதனால் தான் என்னவோ எழுத்துக்களால் அதிகாரத்தின் உச்சம் தொட்டோரை விட பேச்சுக்களால் உச்சம் தொட்டோரின் எண்ணிக்கை அதிகம்

எல்லாரையும் திருப்தி படுத்த நினைப்பவன் மிகப்பெரிய நடிகன் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்

ஆத்திரக்காரன் ஆயுதத்தை தேடிக் கொண்டிருக்கிற தருணத்தில் புத்திசாலி சத்தமில்லாமல் வியூகங்களை வகுத்து கொண்டிருப்பான்

தன்னைத் தானே தனிமைப்படுத்துதல் அரசியல் களத்தில் தற்கொலை என்ற உண்மை புரிந்தோர் புத்திசாலிகள்

சாதி, மத வெறியர்களின் கையில் இருக்கும் கத்தியை விட அவர்கள் கையில் இருக்கும் திருட்டு எழுதுகோல்கள் அபாயகரமானவை என்பதை உணர்ந்தோர் புத்திசாலிகள்.

செத்து செத்து பொழைப்பதை விட வாழ்வதற்காக சாக துணிவது எவ்வளவோ மேல் என்போர் போராளிகள் ஆகி விடுகிறார்கள்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு . பொறுப்புள்ள போராளிகள் எடுத்ததெற்கெல்லாம் ஆத்திரப்படுவதில்லை. மாறாக அமைதியாக சூழலுக்கு ஏற்றாற்போல் களமாடுவார்கள் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்.
எனக்கு முன் நிற்பவர் முட்டாள் என்று எண்ணிக்கொண்டு பேச ஆரம்பிக்கிற அத்தருணத்தில் நான் பயித்தியக்காரனாகி விடுகிறேன்

அசலை புரட்டிப் படிக்க மனதில்லாமல் நகலில் இருந்து நகல் எடுத்துக் கொண்டலைந்தால் கடைசியில் வெற்றுத்தாள் தான் கையில் வந்து சேரும் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்



ஆக்கப் பூர்வமான வாதங்கள் முன்முடிவுகளோடு ஆரம்பிப்பது இல்லை. அது எனக்கு ஒன்றுமே தெரியாது என்ற நிலையில் இருந்து ஆரம்பித்து நிறைகளையும் குறைகளையும் அலசி தெளிவடையும் ஒரு தியான நிலை என்பதை அறிந்தோர் பேறு பெற்றோர்.

தன்னால் உதவி பெற்றவர்கள் எல்லாம் தன்னிடம் நன்றியோடு இருப்பார்கள் என்று
எண்ணுபவன் உலகின் கடைந்தெடுத்த ஏமாளி என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்

பகுத்தறிபவனின் கேள்விகளுக்கு மூடனை அம்மணமாக்கி விடும் வலிமை உண்டு என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்

சாதி வெறி பிடித்து விட்டால் வட்டாரப்பற்று
, மொழிப்பற்று எல்லாம் காணாமல் போய் விடும்

பெண்கள் இல்லா உலகில் மனிதர்களே இருந்திருக்க மாட்டார்கள்
. அப்படியே இருந்திருந்தாலும் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்

தன்னந்தனியாக விளம்பரம் தேட நினைக்கும் வெட்டிப்பயலுக எல்லாம் மக்களுக்கான
போராட்டத்தில் சுயத்தை ஒதுக்கி விட்டு வந்து சேருவார்கள் என்று எண்ணுபவன் முட்டாள் என அறிந்தவன் புத்திசாலி

ஓவ்வொரு போரின் வெற்றியும் தோல்வியும் களத்தில் தீர்மானிக்கபடுவதை விட
உளவியல் தளத்தில் தான் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மை உணர்ந்தோன் புத்திசாலி

எதிரிக்கு தன் மேல் இருக்கிற பயம் தான் தன்னுடைய பலம்
என்பதை உணர்ந்தோன் புத்திசாலி

ஒவ்வொரு மனிதரும் மிகப்பெரும் புதிர்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம் தான் என்பதை அறிந்தோர் புத்திசாலிகள்

உணர்வோடு திரிபவன்
தூங்கி கொண்டிருப்பவனை தட்டி எழுப்புவான் .... உணர்ச்சியில் கொந்தளிப்பவன் சிறிது நேரத்தில் ஆடி அடங்கி வாடி வதங்கி வழிந்து ஒடுங்கி விடுவான் என்பது புத்திசாலிகளுக்கு புரியும்

அறிவூட்டும் புத்தகங்களை விலைமதிக்க முடியாதவையாக
கருதும் எந்த சமூகமும் எப்படி பட்ட இக்கட்டான சூழலையும் உடைத்து விட்டு வெளியே வந்து விடும்

தனக்கு தொடர்பில்லாத இடத்தில் போய் உட்கார்வது உள்ளதையும் கெடுத்து விடும் என்ற உண்மை அறிந்தோர் புத்திசாலிகள்




சிந்திக்க தூண்டிய குரு

நான் பாளையங்கோட்டை புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு வகுப்பு ஆசிரியையாக இருந்த அந்த அம்மாவை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன் ....

ஐந்தாம் வகுப்பு பள்ளி இறுதி நாட்களில் சிறுவர்களுக்கான கதை புத்தகங்களை எங்களிடம் கொண்டு வந்து கொடுத்து படிக்க சொல்லி எங்களது புத்ததகங்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டி விட்டவர் ...
எங்களில் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் அவரது வீட்டிற்கும் வரச் சொல்வார் ....

அப்படி வரசொன்ன மாணவர்களின் பின்னணி அப்போது எங்களுக்கு தெரிந்து இருக்கவில்லை.... அப்போது எங்களுக்கு சாதியோ மதமோ அறிமுகமாகவில்லை ... பிற்காலத்தில் அது எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது தான் தெரிந்தது .... அவர் அவரோட வீட்டிற்கு அழைத்த மாணவர்களில் பெரும்பாலோனோர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் .......

நிறைய பேருக்கு இப்போது அந்த ஆசிரியை என்ன சாதி என்ற கேள்வி தொக்கி நிற்குமே ... சொல்லி விடுகிறேன் ..... அவர் சைவ வெள்ளாளப் பிள்ளை சமூக கத்தோலிக்க கிருத்தவர் .... ஆனால் எங்களிடம் அவர் ஒரு சின்ன வேறுபாட்டை கூட காட்டியதில்லை என்பதை அவர் எங்களோடு நடந்து கொண்ட விதத்தை இன்று நினைத்து பார்த்தால் எனக்கு புரிகிறது
இப்படி பட்ட ஆசிரியர்களால் தான் தமிழ் சமூகம் சிக்கலான சூழலிலும் ஒரு வித சமநிலையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது ...இல்லைஎன்றால் எப்போதோ வெடித்து சிதறி இருக்கும்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

https://www.facebook.com/anthony.fernando.796/posts/679813842102914

Wednesday, February 11, 2015

பொறுமையின் வலிமை



சந்தேகத்தின் அலகுகளால்
குத்தி குதறப்பட்டு
அது தரும் வலிகளின்
சுவடுகளில்
பொறுமையாய்
நடந்து கடக்கும்
ஓர் கணத்தில்
கொத்தி வருத்திய அலகுகள்
முனை மழுங்கி
வெட்கி உடையும் போது
ஏற்படும் சுகத்தில்
பொறுமையின்
அருமை புரியும்

-- அந்தோணி

கள்ளர் என்பது ஒரு சாதியா ?



                                                    கள்ளர் என்பது ஒரு சாதியே கிடையாது. தமிழகத்தில் இன்று சாதியாக கருதப்படுகிற எல்லா இனக்குழுக்களிலும் உள்ள மக்களை உள்வாங்கி உருவானது தான் அச்சமூகம் . சொல்லப்போனால் கள்ளர் சமூகத்தை அனைத்து சமூக குழுக்களும் சரி விகிதமாய் கலந்து கட்டி உருவாக்கப்பட்ட சமூகம் என்று கூட சொல்லலாம் ....


அதில் சில பட்டபெயர்களையும் அந்த பட்ட பெயர்களில் இருக்கிற சாதிகளின் பெயர்களையும் ஒரு ஒப்புமைக்காக கீழே தருகிறேன்


நாடார் சமூக பெயர்கள் வரும் பட்டப்பெயர்கள்
===========================================
                                                                  ஊமத்தநாடார். ஊமத்தநாடர்., ஊரத்திநாடார், கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார், கருப்பட்டியர், காசிநாடர், காசிநாடார், சென்னிநாடர், சேனைநாடர், சேனைநாடார், சோழங்கநாடார், நாடர், நாடார் நாட்டார் நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார் பூழிிநாடர், பூழிிநாடார், பனைகொண்டார், பனையதேவர், பனையர், பன்னையர், பன்னையார். பனையாண்டார் பனையாளர் பனையாளியார், பனையாட்சியார.. பனைராயர், சேணர், சாணர், சாணையர் சேணரையர், சாணரையர் சேணாடர், சேணாநாடார், சேனைநாடார், சென்னாடார்
                                       --------------------------x------------------------

பிள்ளை சாதி பட்டப்பெயர்கள்
(இது பல சாதிகளிலும் வழங்கும் பட்டபெயர் தான்
===============================================
                                           கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை
                                        --------------------------xx------------------------

குறும்பர் , குருபர் (கிருட்டிணகிரி போன்ற பகுதிகளில் வாழ்கிறார்கள்)
================================================================
                                           குறும்பர், குறும்பராயர்
                                       --------------------------xx------------------------


கேரளத்தோடு தொடர்புடைய பெயர்
=================================
                                                    கேரளராயர்,
                                          --------------------------xx------------------------

சிங்களர்களோடு தொடர்புடைய பெயர்கள்
=======================================

                                                       சிங்களநாடர், சிங்கநாடார் , சிங்களப்பிரியர், சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர், சிக்கராயர், சிங்கராயர், சிங்களராயர், சிங்களர், சிங்களார், சிங்களாளியர், சிங்களாந்தகன், சிங்களேந்தியார்
                                                    --------------------------xx------------------------

தெலுங்கு பேசும் சாதிகளோடு தொடர்புடைய பெயர்
===============================================
                                                          நாய்க்கர், நாயக்கர்
                                                   --------------------------xx------------------------
தேவேந்திரர்கள் என்று அழைக்கப்படும் பள்ளர்களோடு தொடர்புடைய பெயர்
=======================================================================

                                                           பசும்படியார், பசும்பிடியார், பசும்பிடியர், பசுபதியார், பசுபதியர. பஞ்சரமார்
                                                    --------------------------xx------------------------

மீனவ சமூகங்களோடு தொடர்புடைய பெயர்
===========================================
                                                           செட்டியார், செம்படையார், செம்படையர், செம்புடையர்
                                                      --------------------------xx------------------------

வன்னியர்ளோடு தொடர்புடைய பெயர்
=================================
                                                          படைத்தலைவர், படைத்தலையர், படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார்
வன்னிகொண்டார், வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார் வன்னியர், வன்னியனார்
                                                        --------------------------xx------------------------

பறையர்கள் மற்றும் வள்ளுவர்களோடு தொடர்புடைய பெயர்
==========================================
                                                           பொறையர், இருப்பரையர் , செம்பரையர், பண்டாரத்தார்
                                                        --------------------------xx------------------------
                                                          முதலியார்
                                                        --------------------------xx------------------------
                                                       முத்தரையர்
                                                          --------------------------xx------------------------
                                                        பாப்புரெட்டியார்
                                                         --------------------------xx------------------------
                                                   நன்னியர்,நயினியர், நைனியர், நைனியார்
:
:


                                                                  மற்றுமொரு விசயத்தையும் சேர்த்து கொள்கிறேன் . இந்தியாவில் இருக்கிற குடிகளில் மிகத்தொன்மையான மரபணுக்களை அதாவது ஆப்பிரிக்க மற்றும் ஆசுத்துரேலிய பழங்குடிகளின் மரபணுக்களோடு நெருங்கிய தொடர்புடைய மரபணுக்கள் கள்ளர்களில் "பிரமலை கள்ளர்கள்" என்று அழைக்கப்படும் இனக் குழுக்களில் தான் அதிகமாக காணப்படுகிறது.


விவாதிக்கலாமே ... இப்படியாவது பிளவுண்டு கிடக்கும் தமிழ் சாதிகளை ஒற்றுமை படுத்தலாமா என்று முயற்சிப்போம்.

https://www.facebook.com/anthony.fernando.796/posts/700687370015561



புத்தனும் கோடாலியும்





பொறாமையே
வன்முறைகளின்
மூலகாரணம்
என்றுணர்ந்தவன்
எல்லாம் துறந்து
புத்தன் ஆனான்
என்ன கொடுமை
வன்முறைகளின்
வலிய வீச்சிற்கு
நேற்று
பலியானவன்
இன்று
புத்தனை பிளக்க
போதிமரம் நோக்கி
கோடாலியோடு
ஓடுகிறான்
.
                                                                                                                        ஆக்கம்:  அந்தோணி

https://www.facebook.com/anthony.fernando.796/posts/700891016661863

மாணவ தோழமைகளுக்கு ஓர் வேண்டுகோள்



உலகத்தின் எந்தவொரு விடுதலை மற்றும் உரிமை மீட்பு போராட்டங்களின் வெற்றியும் தோல்வியிலும் மாணவர்களின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக தான் இது வரை இருந்து வருகிறது. இனியும் அப்படியே.. அதில் எந்தவொரு மாற்றமும் இருக்கபோவதில்லை. மாணவ பருவம் எதையும் பற்றிய கவலையின்றி களிக்க கூடிய ஒரு பருவம். அத்தகைய பருவத்தில் நமக்கு அருகாமையில் நடக்கிற அநீதிகளை கண்டு கொதித்தெழுந்து அதை எதிர்த்து போராட மனம் வருகிறதென்றால், அதன் பின்பு மானுடத்தின் மீதான எதிர்பார்ப்புகளற்ற அன்பே முக்கியமான ஒன்றாக இருக்கும்.
மாணவர்கள் தங்களுக்கு முன்பே நின்று கொண்டிருக்கிற அசூர பலம் பொருந்திய ஒரு அழிவு சக்தியை எதிர்த்து களமிறங்கி போராட துணிகிறபோது தங்களுக்கான ஆதரவு சக்தியை தங்களை சுற்றிலும் கட்டமைத்து விட்டே களம் இறங்குவது நல்லது. உணர்ச்சிவயப்பட்டு தொடங்குகிற எந்த செயலும் அது தொடங்கப்படுகிற வேகத்திலேயே மரணித்து விடும் . அதே நேரத்தில் உறங்கி கொண்டிருக்கிற சக மனிதர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி தொடுக்கப்படும் போராட்டங்களுக்கு முன்பு உலகின் எத்தகைய அழிவு சக்தியும் மண்டியிட்டு விடும். தென் அமெரிக்காவில் தோழர்கள் சேகுவேரா, காசுட்ரோ போன்றவர்களால் கட்டி எழுப்பப்பட்ட மக்கள் புரட்சியாகட்டும் , ருசியாவில் கொடுங்கோலன் “சார்” மன்னனுக்கு எதிராக தோழர் லெனின், சுடாலின் போன்றோரால் கட்டியெழுப்பட்ட பொதுவுடைமை புரட்சியாகட்டும் , தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக எழுந்த மாணவர் புரட்சியாகட்டும், அவையெல்லாம் அத்தகையதே. அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படாத எந்த செயலும் அதன் இலக்கை எட்டுவதில்லை.


மாணவர்களுடைய போராட்டம் மாணவர்கள் தங்களை கொள்கை ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் வளர்த்துக் கொண்டு சகமாணவர்களை சரியான முறையில் அரசியல்மயப்படுத்தி முன்னெடுக்கும்போது தான் அது வலுவான ஒன்றாக இருக்கும். மாணவர்களிடையே இருக்கும் சாதி மத ரீதியான பிளவுகளை களைந்தெடுக்காமல் சமூகத்தை பற்றிய சரியான புரிதலை சக மாணவர்களுக்கு ஏற்படுத்தாமல் முன்னெடுக்கப்படுகிற எந்தவொரு போராட்டமும் விசிலடிச்சான் குஞ்சுகளின் போராட்டமாக தான் இருக்கும். அப்படியான போராட்டத்தை முன்னேடுப்பவர்களின் பின்னிலைமை முன்னிலமையை விட மோசமாக முடிந்து விடக்கூடியதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். என்னென்றால் இங்கே மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி கல்லாகட்ட முனையும் சந்தர்ப்பவாத நரிகள் தான் அதிகம்.

நாவில் தேனையும் உள்ளத்தில் நஞ்சையும் வைத்துக் கொண்டலைகிற அத்தகைய நரிகளை உள்ளிணைத்து கொண்டு உரிமைக்கான போரில் வெற்றி கண்டு விடலாம் என்பது முதலுக்கே உலை வைக்கும் நடவடிக்கையே அன்றி வேறெதுவும் ஆகாது. அப்படிப்பட்ட நரிகள் உங்களுக்காக குழிவெட்டுபவர்களின் கையில் மண்வெட்டியாக செயல்படுபவர்கள். உண்மையான அர்பணிப்புடன் மாணவர்கள் ஆரம்பிக்கிற போராட்டங்களை அத்தகைய மண்வெட்டிகளின் கைகளில் ஒப்படைப்பது எத்தகைய கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து அதற்கேற்றார் போல் நடந்து கொள்வது நன்று. அப்படிப்பட்ட நரிகளை கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடினமான செயல் இல்லை. பொதுவாக அப்படிப்பட்ட நரிகள் ஒரே நேரத்தில் ரெண்டு படகுகளில் காலை விரித்து வைத்துக் கொண்டு பயணிக்க முற்படுபவையாக இருக்கும். பொதுவாக அவர்களிடம் “எங்கே ஆதாயம் இருக்கிறதோ அங்கே போய் நின்று கொள்ளும்” மரபணுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். சமூகத்தின் விடுதலைக்காக போராடுவதை விட அதிகாரத்தை எப்படி தங்களுடைய பிடிக்குள் கொண்டு வருவது என்பதை பற்றிய சிந்தனைகள் தான் அவர்களது முழு மனதையும் ஆக்கிரமித்து நிற்கும். இப்படியான அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்திவிட்டாலே போதும், மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தின் இலக்கை எளிதாக எட்டி விடலாம்.

சரியான முறையில் முன்னெடுக்கப்படாத போராட்டங்கள் ஒட்டைப் பானையில் நீர் நிரப்பி எல்லைகளற்ற பாலைவனத்தில் பயணம் செய்ய நினைப்பது போலன்றி வேறெதுவும் இல்லை


பின்குறிப்பு : மாணவர்களை உசுப்பேற்றி விட்டு அவர்களை சிக்கலில் மாட்ட வைத்து விட்டு தங்களுடைய வளைகளில் சொகுசாக உட்கார்ந்து காலத்தை கழிக்கும் நரிகளின் மீதான கோவத்திலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு சிக்கலின் உச்சாணி கொம்பில் போய் மாட்டி தங்களை தாங்களே வதைத்து கொள்ளும் மாணவ தோழமைகளின் மீதான கரிசனையிலும் எழுந்த ஓன்று


https://www.facebook.com/anthony.fernando.796/posts/703349516416013