Thursday, January 5, 2012

தோழருக்கு ஒரு அன்பு மடல்.....

தோழர் எனக்கு உங்கள மீது எந்த தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது . சொல்லப்போனால் நாம் ரெண்டு பெரும் கருத்தளவில் ஒத்து போகிறவர்கள். அதைவிட மற்றொரு விடயம் நாம் இருவரும் இதுவரை எந்தவித முரண்பாடான விவாதங்களை நடத்தியவர்களும் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெரியாரை பின்பற்ற துடிக்கிறவன் என்றளவில் பலருடனும் கொள்கை ரீதியாக கடுமையாக மோதி இருக்கிற போதிலும் அவர்கள் மீது இதுவரை எந்தவித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியையும் நான் வளர்த்து கொண்டது கிடையாது. சமுதாய அக்கறை இல்லாமல் சுய சாதி, மத, இன, மொழி வெறியோடு பேசுபவர்களை கிஞ்சித்து கூட மனிதத்தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறார்களே என்று எண்ணி வருந்தி தான் இருக்கிறேன். நான் கடுமையாக அடிக்கடி எல்லாருடனும் மோதி கொள்ளும் ஒரு விடயம் பார்ப்பனியம் தான். அது என் மூதாதையர்களின் மொழியும், பண்பாடும், உறவுகளும் பார்ப்பனியத்தால் சின்னாபின்னப்படுத்தபட்டதால் எழுந்த கோபத்தின் விளைவு. அதை பற்றி என்றும் நான் வருந்தியதே கிடையாது. வருந்த போவதும் இல்லை. பார்ப்பனிய வெறியோடு சுற்றுகிற பார்ப்பனர்கள் மீதும் அவர்களுக்கு காவடி எடுக்கும் சொம்பு தூக்கிகளோடும் தான் கடுமையாக கடிந்து சண்டை போட்டிருக்கிறேன். அதே நேரத்தில் நான் பொறுமை காத்த பிறகும் எல்லை மீறி என்னை தனிப்பட்ட முறையில் மோசமாக திட்டிய (பதிலுக்கு நானும் திட்டி இருக்கிறேன் அதை மறுக்கவில்லை) அவர்களில் பலரும் இன்னமும் என் நட்பு வட்டத்தில் தான் இருக்கிறார்கள்.

என்னுடைய முகநூல் நட்பு வட்டத்தில் இருந்து உங்களை நீக்கியதற்கு ஒரே காரணம், சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில், தங்கள் முகநூல் முகப்பு படமாக சமுதாயத்தின் மீது எந்தவித அக்கறையும் இன்றி இருக்கும் நடிகர்கள் புகைப்படத்தை வைத்துள்ளவர்கள், மற்றும் அத்தகைய புகைப்படங்களுடன் எனக்கு நட்பு வேண்டுகோளை அனுப்புபவர்களை நீக்க போவதாக பதிவு போட்டு இருந்தேன். அதன்படி சில பேரை நீக்கியும் இருந்தேன். அப்படி அதை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நேற்று நடிகர் ரசினியின் புகைப்படத்தோடு உள்ள ஒருவரை என் நட்பு வட்டத்தில் பார்த்தேன் உடனே நீக்கி விட்டேன். நீக்கி நீங்கள் பதில் பதிவு போடும் வரை அது நீங்கள் தான் என எனக்கு தெரியாது. என்னன்னா இதே போல் உங்களுடைய பெயரில் ஏற்கனவே கமல் மற்றும் விசய் போன்றோரின் புகைப்படங்களோடு என் நட்பு வட்டத்தில் இருந்த ஒருவரையும் வேண்டுகோள் அனுப்பிய மற்றொருவரையும் நீக்கி இருந்தேன்.

அதென்னவோ தெரியலை எனக்கு. நல்லவன் மாதிரி தன்னை காட்டிக்கொண்டு திரைப்படங்களிலும், தனக்கு தேவைப்படும் நேரங்களில் மேடைகளிலும் பஞ்ச வசனம் பேசி ரசிகனுங்களை உசுப்பேத்தி கொண்டு, ஒழுங்காக வருமானவரி கட்டாமல் கருப்பு பணத்தை சேர்த்து வைத்து கொண்டு தன்னை ஊழல் எதிர்ப்பு போராளியாக காட்டி கொள்ளும், திரைமறைவில் வில்லத்தனமான வேலைகளில் ஈடுபடும் நடிகனுன்களோட புகைப்படத்தை தங்களுடைய முகப்பில் வைத்திருப்பவர்கள் அமெரிக்க குடியரசு தலைவராகவோ இல்லை உலகின் பெரும் பணக்காரராகவோ இருப்பதை பற்றி எல்லாம் கவலை கிடையாது அவர்கள் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் இருப்பது தான் எனக்கு கவலை தரும் விடயம். நடிகனுங்க பின்னால் சுற்றுபவர்களுக்கு சமூக அக்கறை இருக்கும் என்ற பகல் கனவுகளை எல்லாம் நான் காண்பது இல்லை. வேண்டும் என்றால் அந்த தறுதலைகளை போல இவங்களும் சமூக அக்கறை உள்ளவர்கள் போல நடிக்கலாம் என்பது என் மனதில் ஆழமாக பதிந்து விட்ட ஓன்று.

என்னை பொறுத்தவரையில் அடுத்த தலைமுறைக்கு நாம் வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் ஒரு எடுத்துக்கட்டாகவாவது இருக்க வேண்டும். அதற்காக பெரியார் போன்ற சமூக போராளிகளை போல் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று கூட வேண்டாம். ஏனெனில் இப்போதெல்லாம் 15, 16 வயதில் உள்ள விடலை பசங்க சமூக வலைத்தளங்களை அதிகம் பாவிக்கிறார்கள். அந்த பசங்க நம்மை பார்த்து திரைப்பட நடிகர்கள் மீதான மோகத்தில் இப்ப இருக்கிற நிலைமையை கட்டிலும் மோசமான நிலைமைக்கு செல்ல நாம் காரணமாக இருந்து விட கூடாது. சினிமா நடிகர்களை பின்பற்றுவது ஒரு மரியாதைக்குரிய செயலாகவோ இல்லை மற்றவர்களிடம் தங்களுக்கு மதிப்பு ஏற்படுத்தும் செயலாகவோ இனி வரும் தலைமுறைகள் நினைக்க கூடாது. எவ்வளவோ சிறுவர் சிறுமியர்கள் சினிமா மோகத்தால் தாங்கள் படிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து இருக்கிறார்கள். செய்திதாள்களில் அடிக்கடி பார்க்கலாம் நடிகனை, நடிகையை காண ஊரில் இருந்து நகரத்திற்கு வந்து விழி பிதுங்க நின்ற சிறுவர் சிறுமியர்கள் மற்றும் திரைப்பட மோகத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கல்லூரி, பள்ளிக்கூடங்களில் பயிலும் இளம் பெண்களை பற்றி. அப்படி கடந்த காலங்களில் செம்மறியாட்டு மந்தையாக சுற்றி வாழ்க்கையை வீணாக்கியவர்களில் நானும் ஒருவன். மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார், கர்மவீரர் காமராசர், சேகுவேரா போன்றார் எனக்கு அறிமுகமாகிய போது அந்த போதையில் இருந்து விடுபட்டு விட்டேன்.

ஒரு தந்தையானவன் புகைப்பழக்கத்திற்கோ, அல்லது குடிக்கோ அடிமையாகி அதிலிருந்து விடுபட நினைத்தும் சூழ்நிலைகளின் விளைவாக அதில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய குழந்தையின் முன்பு புகை பிடிக்கவோ இல்லை குடிப்பதையோ செய்யாமல் தன்னை கட்டுபடுத்தி கொள்வதன் மூலம் தன்னுடைய குழந்தையை தான் விழுந்த குழியில் விழுந்து விடாமல் தடுக்கலாம். அவ்வாறில்லாமல் தன்னுடைய குழந்தைகள் முன்பு எவ்வித சுய கட்டுப்பாடும் இன்றி அவ்வாறான செயல்களில் ஈடுபடுவ்து அயோக்கியதனமின்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

எனக்கு மத, சாதி, இன ,மொழி வெறியர்கள் எனது நட்பு வட்டத்தில் இருப்பது பற்றி கூட கவலை படமாட்டேன். அவர்களோடு விவாதிப்பதால் நமது விவாத திறமையாவது வளரும் . ஆனால் திரைப்பட நடிகர்களை கொண்டாடுபவர்களிடம் பேசுவதையே தவிர்ப்பவன். அப்படியான சில நேரங்களில் சில நல்ல நட்புகளை கூட இழக்கலாம் . வேதனையாக தான் இருக்கிறது . ஆனா நம்ம பாட்டன் ராமசாமி அப்படி கிடையாதே கொள்கைக்காக உறவுகளையே தூக்கி எறிந்தவனல்லவா. அவனுடைய பேரனாக என்னை காட்டி கொள்ள முயலும்போது இப்படியான சூழ்நிலைகள் வந்து விடுகிறது.

சில நேரத்தில் நாம் இவ்வாறு கூட நினைக்கலாம், உதவி செய்பவரை, அவர் கெட்டவராக இருந்தாலும், நன்றியோடு நினைப்பது தமிழர் பண்பாடல்லவா, அதை செய்வதால் நாமும் கெட்டவராகி போய் விடுவோமா என்று. ஒரு அயோக்கியனிடம் தன்னுடைய இக்கட்டான நிலையில் உதவி வாங்கியவர் கெட்டவராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை . அதே நேரத்தில் அந்த நல்லவர் தனது அறியாமையால் அந்த அயோக்கியனை தூக்கி சுமப்பதால் அந்த அயோக்கியன் நல்லவனாகி விடமுடியாது. ஊரை அடித்து உலையில் போட்டு கொண்டு திரியும் வேடதாரியிடம் உதவிக்காக போய் நிற்பது சுயமரியாதையை காக்கும் செயல் அல்ல. அது நம்மை நாமே மற்றவர்க்கு அடிமையாக விற்று போடும் தான் தோன்றித்தனத்தின் முதல் படி. அதற்காக மற்ற எல்லாரும் யோக்கியர்கள் என்று கூறி விட முடியாது ஆனால் யோக்கிய வேடம் பூண்டு கொண்டு அயோக்கியதனத்தில் ஈடுபடுபவனை எல்லாம் தலைவனாக்குவதும் அவனின் புகழ் பாடுவதும் அசிங்கத்தின் உச்சம். காமகொடூரன் ஒருவன் பத்து பதினைந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி விட்டு பிறிதோர் பொண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறேன் என்று கூறும்போது அந்த பெண்ணின் வீட்டார் அந்த கயவாளியை ஏற்று கொண்டு புகழ்வதில் சுயநலம் இருக்குமே ஒழிய சமூக அக்கறை எல்லாம் இருக்காது. அவர்களால் சமூகத்தை பற்றி சிந்திக்கவும் முடியாது. அவர்கள் தாங்கள் மனத்தை தாங்களே ஊனமாக்கி கொள்கிறவர்கள்.

இப்படியான ஒரு எண்ண கொந்தளிப்பில் இருந்த எனக்கு, சமூகத்தை தன்னுடைய சுய நலத்திற்க்காக பயன்படுத்தி கொண்டு அதன் மீது எந்த அக்கறையும் இல்லாமல் திரியும் நடிகனின் புகைப்படத்தை முகநூல் முகவரியின் முகப்பு படமாக வைத்து இருந்தை பார்த்தவுடன் அதன் சொந்தகாரர் யார் என்று சிறிதும் கூட யோசிக்காமல் என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விட்டேன். கடைசியில் தான் தெரிந்தது அது தாங்கள் என்று.

நான் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய படத்தையோ இல்லை நான் பெரிதும் நேசிக்கும் சமூக போராளிகளான மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், சேகுவேரா, என்று எவருடைய புகைப்படத்தையும் முகப்பு படமாக வைத்ததில்லை. அவ்ர்களைது புகைப்படத்தை வைத்து தான் அவர்களது கொள்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும்என்றோ அவர்களை மரியாதை செய்யும் செயல் என்றோ படம் காட்டுகிற எண்ணங்கள் நமக்கு வருவதில்லை. மக்களுக்கு செல்ல வேண்டிய செய்திகளை தான் முகப்பு படமாக வைத்து வருகிறேன். மேலும் என்னுடைய பாட்டங்கலான சமூக போராளிகள் தங்களுடைய வாழ்க்கையை ஒறுத்து பெற்று தந்த சமூக நீதியின் மூலம் கல்வி கற்று முன்னுக்கு வந்த எனக்கு சமூக வலைத்தளத்தை ஒரு பொழுது போக்கு சாதனமாக வைத்து கொள்ள விருப்பமில்லை. எமக்கு கிடைத்த விடுதலையை என்னிடம் இருந்து தட்டி பறிக்க தொலைகாட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் மூலம் அரக்க பலத்தோடு மோதும் பர்ப்பனியத்தை எதிர்த்து நிற்க எனக்கு கிடைத்த இது போன்ற சிறு துரும்பை ஆயுதமாக வைத்து கொண்டு எம்முடைய பாட்டனார்கள் தொடங்கி வைத்த போரை தொடர்ந்து வருகிறேன். அது கடைமட்ட மனிதன் விடுதலை பெரும் வரை தொடரும்.

இப்போது சொல்லுங்கள் நான் செய்தது தவறா என்று. ஆனால் உங்கள் முகப்புப்படமாக இருந்த அந்த நடிகனின் புகைப்படத்தை நீங்கள் நீக்கியது, சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். அந்த மகிழ்ச்சியில் உங்களோடு மறுபடியும் கைகோர்க்க எனது கரத்தை உங்களை நோக்கி நீட்டுகிறேன். வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

இப்படிக்கு

ஏற்றத்தாழ்வற்ற தோழமையுடன்

அந்தோணி

மேலேயுள்ள கட்டுரை ஒரு நடிகனின் புகைப்படத்தை தன்னுடைய முகநூல் முகப்பு படமாக வைத்திருந்த தோழரை என் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கி இருந்தேன். அது அவரை எவ்வகையிலும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை அவருக்கு விளக்க எண்ணி வரைந்த மடலாக இதை படைத்து இருக்கிறேன்.

ஏனைய தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் திரைப்படங்களை பாருங்கள் , விமர்சியுங்கள். ஒரு நடிகன் சமூக அக்கறையோடு ஏதவாது சொன்னால் பாராட்டுங்கள். ஆனால் சமூக போராட்டத்தில் முழு ஈடுபாட்டோடு அவர்கள் கலந்து கொள்ளாதவரை அவர்களை தூக்கி சுமக்காதீர்கள். அப்படி செய்வீர்களானால் அது உங்களுக்கும் நல்லது உங்களை சுற்றி வளரும் அடுத்த தலைமுறைக்கும் நல்லது

No comments:

Post a Comment