Tuesday, November 1, 2011

முக நூலில் .... ஏன் இவிங்க மட்டும் இப்படி இருக்கிறாய்ங்க

ஆரம்ப காலங்களில் பறவைகள் மூலமாக தொலைதூர செய்திகளை ஒன்றுக்கொன்று பரிமாறி கொண்ட சமூகங்கள், பின்பு மோட்டார் வாகனங்கள், தொடர்வண்டி, கப்பல் விமான போக்குவரத்து என்று வளர்ந்த பின்பு வெகு வேகமாக ஒன்றோடு ஓன்று தன்னை இணைத்து கொண்டது. ஊடகங்கள் வருவதற்கு முன்பு வரை வரையறைக்குட்பட்ட தனிப்பட்ட செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த சமூகம் தொலைதொடர்பு சாதனங்கள் ஊடகங்கள் என்று வளர்ந்த பிறகு உலகம் ஒரு சிற்றூராகவே சுருங்கி போனது.


கணினி யுகம் தனது ஆக்டோபசு கரங்களை விரிக்க ஆரம்பித்தபோது உலகம் அதன் கரங்களுக்குள் அடைபட்ட பந்தாக மாறி போனது. (மனிதர்கள் ஆக்டோபசுகளை கொண்டு எதிர்காலத்தை கணிக்க முற்படுவது என்பது வேறு விடயம்... ரொம்ப முத்தி போனா புத்தி வித்தியாசமாக யோசிக்கும் என்பதற்கான சான்று அது). ஆனால் சமூக இணையதளங்களின் வளர்ச்சிக்கு பின்பு தனிமனித ரகசியங்கள் என்பது சமூக வழக்கில் இருந்து கிட்ட தட்ட முற்றிலுமாக விடை பெற்று விட்டது என்றே சொல்லலாம்.

இப்படி ஒருபக்கம் சமூக இணையத்தளங்களின் அசூரத்தனமான வளர்ச்சியில் ஊடகங்கள் கூட ஓரங்கட்டப்படும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அவற்றை முறையாக பயன்படுத்த தவறுவதால் நிறைய அபத்தங்களுக்கும் இட்டு செல்கிறது.


ஒவ்வொரு சமூக இணையத்தளமும் அவற்றிற்கென்று சில தனி சிறப்புகளை கொண்டுள்ளது. அப்படி பட்ட தனிச் சிறப்புகளில் ஒன்றாக பிரபலமான சமூக இணையத்தளமான முகநூலும் தன்னுள் விருப்ப, பதிலுரை மற்றும் பகிர்வு பொத்தான்களை உள்ளடக்கி உள்ளது. அதாவது நண்பர் வட்டங்களில் பதியப்படும் செய்திகளை விரும்புவதாக காட்டுவதற்கும், பதிலுரைப்பதற்கும், அதை பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் உதவும் பொத்தான்கள் அவை. அந்த பொத்தான்களை முகநூலை பயன்படுத்துவோர் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கொஞ்ச நாளாக கவனித்து வந்த ஒன்றை நான் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த பதிவு

போடுகிற பதிவுகளுக்கும் ,பகிர்ந்து கொள்ளுகிற விடயத்திற்கும் விருப்ப பொத்தான்களை அழுத்துவதற்கு முன்னால் இவிங்க எல்லாம் மற்றவர்கள் பதியும் பதிவுகளையோ இல்லை பகிர்ந்து கொள்ளும் செய்திகளையோ படித்து பார்ப்பார்களோ இல்லையோ..... ஆனால் பொத்தான்களை மின்னல் வேகத்தில் அழுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். அதாவது நான் உன்னோட பதிவை படித்து விட்டேன் என்ற பொய்யை மற்றவருக்கு தெரியப்படுத்தவா என்று புரியவில்லை இதில் கொடுமை என்னன்னா... விபத்துக்கள், இறப்புகள், போன்ற துயரம் தரும் செய்திகளை சம்பந்தப்பட்டவர்கள் பதியும் போது ஏதோ அந்த செய்திக்கு ஒட்டு போட்டு அதை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது போல் விருப்ப பொத்தான்களை சில அன்பர்கள் அழுத்தி தள்ளி விடுகின்றனர். அந்த செய்திகள் என்ன கொண்டாட்டத்திற்குரிய செய்திகளா என்ன ? எவ்வளவு அநாகரிகமாக இருக்கிறது மற்றவர்களின் துயரங்களை கூறும் செய்திகளுக்கு விருப்ப பொத்தான்களை அழுத்துவது.


From Profile Photos


நம்மில் யாரேனும் தங்களது துயரங்களை மற்றொருவரிடம் நேரிலேயோ இல்லை தொலை தொடர்பு கருவிகள் மூலமோ பகிர்ந்து கொள்ளும் போது, அதை கேட்பவர் நீங்க சொன்ன விடயம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும். அது போல் தான் இருக்கிறது நம்மில் பலரின் செயல்களும். நமது முக நூல் வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் செய்யும் பதிவுகளுக்கு விருப்ப பொத்தான்களை அழுத்தா விட்டால் ஏதோ நண்பர்கள் வட்டத்தில் இருந்து நம்மை தூக்கி விடுவார்களோ என்ற பயத்தில் செய்கிறார்களோ என்னவோ.

ஊர் பக்கங்களில் “கல்யாண வீட்டுக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை துட்டி வீட்டுக்கு சென்று விசாரிக்காமல் இருந்து விடாதே” என்பார்கள். எதற்கு அப்படி கூறினார்கள் என்றால்... ஒருத்தருடைய மகிழ்ச்சியில் பங்கேற்பதை விட துயரத்தில் இருக்கும் ஒருவரின் துக்கத்தை பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி வருவது, துயரத்தில் இருப்பவர் நமக்கு எதிரியாகவே இருப்பினும் கூட, மிக அவசியம் என்பதை வலியுறுத்த தான். சவாலான சமயங்களில் ஒன்றுக்கொன்று துணையாக இருந்ததால் தான் பரிணாம வளர்ச்சியில் மனித சமூகம் ஏனைய உயிரினங்களை பின்னுக்கு தள்ளி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கொண்டது.

சரி இப்ப விடயத்திற்கு வருவோம் பிறரின் துயரங்களில், குறிப்பாக முக நூலில் பதிவுகள் மூலம் தெரியப்படுத்தப்படும் துயரமான செய்திகள் பற்றிய பதிவுகளுக்கு, நம்மால் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை தேற்றும் பதிலுரைகளை இட முடியாவிட்டலோ, இல்லை அது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் மற்றவர்கள் அத்துயர செய்திகளை அறிய செய்ய உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை, அது போன்ற செய்திகளுக்கு விருப்ப பொத்தான்களை அழுத்தி எங்களுக்கு இன்னும் ஆறறிவு வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை என்று வெளிகாட்டி கொள்ளாமல் இருப்பது சாலச் சிறந்தது.

பல நேரங்களில் நம்மையும் அறியாமல் அது போன்ற தவறுகளை செய்து விடுகிறோம் என்றாலும், அறிந்த பிறகு அவற்றை திருத்தி கொள்வது நல்லது. தவறுகளை திருத்தி கொள்வதில் இருந்து தானே முன்னேற்றத்தின் அடுத்த மைல் கல்லை எட்டி பிடிக்கிறோம்

1 comment:

SURYAJEEVA said...

//இன்னும் ஆறறிவு வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை என்று வெளிகாட்டி கொள்ளாமல் இருப்பது சாலச் சிறந்தது.//

நாங்க எல்லாம் ஏழறிவு ரேஞ்சுல போய் கிட்டு இருக்கோம்.. இன்னும் ஆறறிவுன்னு பேசிக்கிட்டு...

//ரொம்ப முத்தி போனா புத்தி வித்தியாசமாக யோசிக்கும்//

ரொம்ப ரசிச்சேன்.. இதில கொடுமை என்னன்னா ஒருத்தன் அந்த ஆக்டபுஸ் படத்த பிரேம் போட்டு டெய்லி கும்பிட்டு கிட்டு வரான்...

Post a Comment