Saturday, September 10, 2011

தோழி செங்கொடி அவசரப்பட்டு விட்டாளோ................

தலைப்பை படித்தவுடன் பலரது புருவங்கள் வியப்பிலோ இல்லை அதிர்ச்சியிலோ உயரலாம். ஆனால் இப்போது நடக்கிற கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது நான் வைத்த தலைப்பு சரி என்று தான் படுகிறது. மூவருடைய மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் பார்ப்பனிய இந்துத்துத்வ கூட்டமைப்பினால் ஆழ்கடலில் முங்கி கொண்டிருப்பவனின் ஈன முனகலாக போய் கொண்டிருந்த வேளையில், தத்தளித்து கொண்டிருந்த போராட்டத்திற்கு கலங்கரை விளக்கமாய் தன்னையே எரித்து கொண்டவள் தான் எம் தோழி செங்கொடி. போலியாக புனையப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்புவிக்க குற்றவாளி கூண்டில் திணிக்கப்பட்டு தான் தோன்றி தனமான தீர்ப்புகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மகனுக்காக போராடி கொண்டிருந்த அற்புதம் அம்மாளை பார்க்கையில் இவர்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை நம் அனைவருடைய மனங்களில் கொழுந்து விட்டிருந்தால் அது இயல்பான ஒன்றே... அப்படி தோழி செங்கொடி மனதில் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பு தான் கும்மிருட்டில் தள்ளாடி கொண்டிருந்த போராட்டத்திற்கு வெளிச்சத்தை காட்ட அவளுடைய உடலின் மீதே பற்றவும் என்று கூறினால் அது பொய்யாகாது. ஆனால் அதே அற்புதம் அம்மாள் எந்த மகனுக்காக போராடுகிறாரோ, அந்த மகனின் உயிரை பறிக்க முண்டி கொண்டு வேலை செய்யும் பார்ப்பனிய அம்புசத்திற்கு நன்றி சொல்ல முண்டி கொண்டு முன்வரிசையில் நிற்பதை பார்த்தபோது , அது சந்தர்ப்பவாதம் தோழி செங்கொடியின் தியாகத்தை பல்லை காட்டி பழிப்பு செய்தது போல் தான் தோன்றியது. எவ்வளவு தீர்க்கமாக போராடி கொண்டிருந்த அந்த அம்மாவை சந்தர்ப்பவாதம் என்னும் பேய் கட்டுபடுத்த ஆரம்பித்து விட்டதா இல்லை, இவ்வளவு நாளும் சந்தர்ப்பவாதியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தாரா என்ற கேள்விகளும் எழும்பாமல் இல்லை. இங்கு எந்த சூழலிலும் நான் மூவருக்குமான மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த போராட்டம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி மனதில் எழும்பி கொண்டிருக்கும் கேள்விகளை மறைக்கவும் எமக்கு தெரியவில்லை.

From Blogger Pictures


அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனின் மீது திணிக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தை எதற்கு தமிழர்களுக்கு மீது திணிக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டம் என்று வடிவம் கொடுத்திருக்க வேண்டும் அதற்கு பதிலாக அப்பாவிகளின் மீது திணிக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என்று அதனை அழைத்திருக்கலாமே. அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை தூக்கு கயிற்றில் இருந்து போராட காட்டிய உத்வேகத்தை, காலம் காலமாய் இடத்திற்கு ஏற்றார் போல் இந்த்துத்வ, தமிழ் தேசியம் என்ற போர்வைகளை அணிந்து கொண்டு சமுதாயத்தின் கடைவிழும்பில் உள்ளவர்களை ஒடுக்கி சுய இன்பம் அனுபவித்து கொண்டு அலையும் ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தில், தோழி செங்கொடி காட்டி இருக்கலாமே என்று தான் தோன்றுகிறது. அப்படி தானே எண்ண வைத்து விட்டார் அற்புதம் அம்மாள். சாதி வெறியனுக்கு மாலையிட்டு சுய இன்பம் கண்ட ஒருவனின் பின்னால் பலி ஆடு போல் சுற்றுகிறதை பார்க்கும் போது அப்படி தானே தோன்றுகிறது.

அற்புதம் அம்மாள் பார்ப்பனியத்தின் வாசலில் மண்டியிட்டு உயிர் பிட்சை கேட்கிறபோது, அதே பார்ப்பனியம் தமிழ் சமூகத்தோடு வைத்து கொண்ட கள்ள உறவில் பெற்றெடுத்த சாதியத்திற்கும் அதன் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தன்னை களபோராளியாக முன்னிறுத்தி கொண்ட தோழி செங்கொடியின் தியாகத்தின் முன்னால் அற்புதம் அம்மாள் மீது நான் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் மண் சுவரை போல் உதிர்ந்து விழுவதை வேதனையோடு பார்த்து கொண்டிருக்க தான் ஒழிகிறதே தவிர தடுக்க முடியவில்லை. எப்படி தடுக்க முடியும், தன்னுடைய சுயலாபத்திற்காக, தமிழினத்தை காவு கொள்ள துடிக்கும் பார்ப்பனிய தேவதையின் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நன்றி சொல்ல அலைந்து கொண்டிருக்கிற பெண் பித்தனான ஒரு தற்குறியின் பின்னால் சென்று தன்னுடைய மகனுடைய விடுதலையே ஈழ விடுதலை என்றளவில் லட்சக்கணக்கான ஈழ மக்களின் அவலத்தை ஒரு உயிருக்குள் சுருக்கி போட்ட ஒரு பெண்மணியை, சரித்திரத்தை புரட்டி போட வந்த பெண்மணியாக எண்ணியது அவசர குடுக்கைத்தனமோ என்று எமது மனசாட்சியே எம்மை கேலி செய்கிறது. அவருடைய மகனை தூக்கு கயிற்றில் இருந்து தப்பிக்க வைக்க தன்னுடைய உயிரையே ஈகையாக தந்த ஒரு பெண் போராளியின் தியாகத்தை முன்னிறுத்தாமல், அப்போராளி மூட்டிய நெருப்பால் எழுந்த தீவிர எழுச்சிக்கு பயந்து நடுங்கி தனது உரைகளை சமயத்திற்கு ஏற்றார் போல் மாற்றி வாசிக்கிற பார்ப்பனிய நாடக நடிகை அரங்கேற்றிய நாடகத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு கொடி அசைக்க ஓடி கொண்டிருக்க, அற்புதம் அம்மாவால் எப்படி முடிகிறது.

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தையும், இன விடுதலைக்கான போராட்டத்தையும் தனித்தனியே பார்க்கும், தமிழ் தேசியத்தை போர்த்தி கொண்டு அலைகிற போலி தமிழ் தேசிய வியாதிகளான சாதி வெறியர்கள் மூட்டி விட்ட நெருப்புக்கு செங்கொடி தேவையில்லாமல் தன்னை பலிகடாவாக்கி விட்டாளோ என்று தான் தோன்றுகிறது. சாதி வெறியர்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான போரில், உயிர்வாழ்ந்து களமாடி இருந்தால் பார்ப்பனியத்தொடு கள்ள உறவு வைத்து கொண்டு அலைகிற அந்த வெறிநாய்களுக்கு தடுப்பூசியையாவது போட்டு இருக்கலாம். தோழி நீ பார்ப்பனிய அநீதிக்கு எதிராக போராடியதன் விளைவு, பார்ப்பனிய ஊடகங்களால் இன்று உனது கன்னித் தன்மையும், கல்வியறிவும் கழுவேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் நீ யாருக்காக போராடினாயோ அவர்கள் உனக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் ஊடக வன்முறைகளுக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு, பார்ப்பனிய கழுமரத்தை கழுவி துடைத்து கொண்டிருக்கிறதை பார்க்கும் போது நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தான் தோன்றுகிறது.

தயவு செய்து இந்த தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தை மனித நேயத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிரான போராட்டமாகவே சித்தரியுங்கள், அதை விடுத்து தமிழர்களின் உரிமைக்கான போராட்டமாக சித்தரித்து, உயிரை துச்சமென மதித்து களமாடிய போராளிகளின் தியாகங்களின் மீது சேற்றை அள்ளி பூசி விடாதீர்கள். மண்ணின் விடுதலைக்காக போராளிகளை போர்க்களத்திற்கு அனுப்பி விட்ட ஈழத்து தாய்மார்கள் எங்கே. தாய்க்கும் மகனுக்கும் இடையேயான சராசரி பாச போராட்டத்தில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் அற்புதம் அம்மாள் என்கிற சராசரி பெண்மணி எங்கே.

அற்புதம் அம்மாள் என்ற பகுத்தறிவு ஆசான் பெரியாரின் பாசறையில் பாடம் பயின்ற பெண் போராளி எப்படி சராசரியான பெண்ணாக மாறி போனார். அவரை மாற்றியது யார். எந்த அவசரத்தில் அவ்வாறு மாறி போனார். சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் பயம் கூடாது என்று பாடம் எடுத்த வெண்தாடி தாத்தாவின் கொள்கைகளை எங்கே புதைத்து விட்டார். வீணர்களின் பின்னால் சுற்றுவதை விட்டு விட்டு செங்கொடியின் தியாகத்தில் இருந்தாவது அற்புதம் அம்மாள் பாடம் கற்று கொண்டால் அது செங்கொடி சமூக அநீதிக்கு எதிராக பற்ற வைத்த நெருப்பு அணையாமல் இருக்க ஒரு அடி எடுத்து வைத்தது போன்று இருக்கும்.

ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது ஈழ போராட்டம், ஈழ விடுதலை என்று சொல்லி சொல்லியே ஒரு ஈன பிறவி தனது உடலை வளர்த்து இருக்கிறது. அதற்கு ஆயிரமாயிரம் போராளிகளின் தியாகத்தை மூலதனமாக்கி இருக்கிறது. நடிகையின் முந்தானைக்குள் சிக்கி கொண்ட அசிங்கத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள அந்த ஈன பிறவி மறுபடியும் ஒரு முறை மூவரின் தூக்கு கயிற்றை மூலதனமாக்கி இருக்கிறது. சமூக விடுதலை இன விடுதலைக்கான போராட்ட களத்தில் இருந்து இது போன்ற ஈன பிறவிகளை அப்புறபடுத்தும் வரைக்கும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சிகளில் இருந்து தமிழ் தேசியத்திற்கான விடுதலை என்பது வெறும் கானல் நீரே

ஆமாம் செங்கொடி நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தோன்றிய பொழுதிலும், நீ வைத்து விட்டு சென்ற நெருப்பில் போலிகளின் முகத்திரைகளும் கருகி கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு அழுத்தமான பாடத்தை நீ விட்டு சென்று இருக்கிறாய் தோழி.... அது பலனை எதிர்பாராமல் எங்கே சமூக அநீதி நிகழ்ந்தாலும் அங்கே சென்று மனிதமும் நேயமும் வாழ துடிப்பவர்கள் போராட வேண்டும் என்ற அதிமுக்கியமான செய்முறை பாடத்தை.

நெருப்பில் நீ உன்னை பற்ற வைக்கவில்லை...... காலம் காலமாக உறங்கி கொண்டிருக்கும் மனசாட்சிகளையும் பற்ற வைத்து இருக்கிறாய். நீ களமாடிய களத்தில் ஆயிரமாயிரம் செங்கொடிகள் சமூக அநீதிக்கெதிரான போராட்டத்தில் தங்களை இணைத்து கொள்வார்கள். அவர்களுக்கு உன்னுடைய வாழ்க்கை சரியான பாடமாக அமையும்.

செங்கொடி நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று தோன்றிய போதும், யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் கிடந்த நீ இப்போது போராட்டத்தின் தலைமையை ஏற்று இருக்கிறாய். உயிரோடு இருந்து களத்தில் போராடிய நீ இப்போது சமூக நீதிக்கான களபோராளிகளின் மனசாட்சியாக அரியாசனத்தில் வீற்றிருந்து தலைமை ஏற்று வழி நடத்தி கொண்டிருக்கிறாய்.

நீ இறந்து விடவில்லை சகோதரியே செங்கொடி, இப்போது தான் உன் வாழ்க்கை நீ தீர்மானித்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது.. உன்னுடைய வாழ்நாள் தீர்மானமே சமூக அநீதிகளை தகர்த்து எறிவது தானே தோழி. இப்போது தான் உன் வாழ்க்கையை மற்றுமொரு பரிமாணத்தில் முழு வீச்சில் தொடங்கி இருக்கிறாய்.

No comments:

Post a Comment