Thursday, January 29, 2015

விடியலை தேடி ஓடும் பறவைகள்
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள என்னுடைய இணையரின் பெற்றோருடைய வீட்டு மேல்மாடியில் ஒரு இசுலாமிய தம்பதியினர் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். ஐந்துவயதில் ஒரு குழந்தை அவர்களுக்கு இருக்கிறது. தற்போது அந்த இசுலாமியருடைய மனைவி ஐந்து மாதம் கர்ப்பிணி பெண் . அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு உறவினர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வது உண்டு. அப்படி வந்து செல்லும் உறவினர்களை பார்க்கும்போது நான் அடிக்கடி குழம்பி போய் விடுவேன்.
அது வேற ஒன்றுமில்லை நல்லா பெரிய குங்கும பொட்டு வைத்து கொண்டு ஒரு வயதான பெண்ணும் , வேறு சில சமயங்களில் பர்தா போட்ட வயதான பெண்ணும் வருவார்கள். ரெண்டு பேர் வந்தாலும் அந்த இசுலாமிய பெண் மிகுந்த மகிழ்ச்சியோடு வாங்க அம்மா என்று அழைத்து செல்வதுண்டு. குங்கும பொட்டு வைத்த ஒரு பெண்மணி கர்ப்பிணியாக இருக்கும் ஒரு இசுலாமிய பெண்ணை இவ்வளவு அக்கறையோடு வந்து கவனித்து செல்கிறாரே என்று ஆச்சரியமாக பார்ப்பது உண்டு. ரெண்டு நாளைக்கு அங்கே சென்று இருந்தபோது அந்த இசுலாமிய சகோதரரை பார்க்க நேரிட்டது. “அண்ணே, ஒரு குங்கும பொட்டு வைத்த ஒரு பெண்மணி அடிக்கடி உங்க வீட்டிற்கு வந்து உங்க மனைவியை ரொம்ப அக்கறையோடு கவனித்து செல்வதை பார்க்கிற போது தமிழர்களிடையே காணப்படும் சகோதர மனப்பான்மையை பார்க்க பெருமையாக இருக்கிறது” என்று பேச்சை ஆரம்பித்தேன். அது எங்க அம்மா தான் என்று சொல்லி என்னை நோக்கி ஒரு புன்னகையை கசிய விட்டார். நீங்க இசுலாமியர் உங்க அம்மா இந்து ரொம்ப குழப்பமாக இருக்கிறதே என்றேன். அவர் அதற்கு “நான் இசுலாம் மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொண்டேன் , எனது வீட்டில் எல்லாரும் இப்போதும் இந்து மார்க்கத்தை தான் பின்பற்றுகிறார்கள்” என்றார். நான் பதிலுக்கு உங்க வீட்டில் எதிர்ப்பு ஏதும் இல்லையா என்றேன். அவர்களுக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி என்று அடுத்த வெடி குண்டை தூக்கி போட்டார்.


என்னடா இது இசுலாமியர் கடையில் பொருள் வாங்காதே என்று தீவிரமாக காவி வெறியர்கள் தீவிரமாக பரப்புரை செய்து கொண்டு இருக்கிற சூழலில் இங்க ஒரு இந்து குடும்பம் தனது ஆண் மகன் இசுலாமிய மார்க்கத்திற்கு மாறியதையும் அங்கே ஒரு பெண்ணை மணந்து கொண்டதையும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறதே என்ற ஒரு வித முழிப்போடு அவரை பார்க்க அவர் அதை புரிந்து கொண்டவராய், சகோதரரே நான் சக இந்துக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்படும் அருந்ததியர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். அந்த சமூகத்தில் பிறந்ததாலேயே நான் பள்ளியில் படிக்கும்போது பல விதமான உடல் மற்றும் மனரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்த இசுலாமிய சகோதரன் என்ன அவர் வீட்டிற்கு பக்ரீத் அன்று உணவு உன்ன அழைத்தான். நான் முகுந்த தயக்கத்துடனே அவனுடைய வீட்டிற்கு சென்றேன். ஆனால் அவனது பெற்றோர்களும் சகோதரர்களும் என்னை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரேவேற்றது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது . முதன் முதலாக ஒரு அந்நிய இடத்தில் மிகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டது எனக்கு மிகுந்த ஆச்சரியமாகபட்டது. அதன் பிறகு அந்த இசுலாமிய நண்பனுடனான எனது நட்பு தனித்துவமான ஒன்றாக மாறியது. அவன் தொழுகைக்கு போகிற நேரம் என்னையும் கூட்டி செல்ல அவனை நான் பணிப்பேன். தொழுகை செய்யும் நேரத்தில் வரிசையாக எல்லாரும் முகங்குப்புற விழும் நேரத்தில் ஒருவர் பின்புறம் பின்னால் இருப்பவரின் முகத்திற்கு நேராக இருப்பதும் அதை அங்கே ஒருவரும் பெரிது படுத்தாமல் தொழுகையில் மிகுந்த அக்கறையோடு இருப்பதும் என்னுடைய ஆச்சரியங்களை அதிகரித்தது.


கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்படாத சமூகத்தை சேர்ந்த எனக்கு இங்கே வழிபாட்டு தலத்தில் மனிதர்கள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் பழகுவதை பார்த்த போது எனக்குள் நான் இந்த மார்க்கத்தை தான் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அதற்கு பின்பு நான் இசுலாம் மார்க்கத்தை பற்றிய புத்தகங்ள் நிறைய படிப்பேன். சான்றிதழில் இந்துவாக இருந்தாலும் நான் வாழ்வியல் அடிப்படையில் ஒரு இசுலாமியனாகவே மாறி விட்டு இருந்தேன். ஆரம்பத்தில் எனது வீட்டில் உள்ளவர்கள் என்னை கேள்விகுறியோடு பார்த்தாலும் ஒரு முறை எனது பெற்றோர்களை நான் ஒருமுறை நோன்பு திறக்கும் விழாவிற்கு அழைத்து சென்றபோது போது அங்குள்ளவர்கள் எனது பபெற்றோர்களுக்கு அளித்த மரியாதையை பார்த்து அவர்களும் என்னுடைய இசுலாமிய மார்க்கத்தின் மீதான நாட்டத்தை பற்றி எதுவும் பேசுவதில்லை கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் வேலைக்காக வந்த போது ஒரு இசுலாமியர் நடத்தும் கடையில் எனக்கு வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அது தான் தான் இசுலாம் மார்க்கத்தை தழுவுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. முதல்முறையாக இசுலாம் மார்க்கத்திற்குரிய சடங்குகளின் மூலம் என்னை முற்றிலுமாக இசுலாமியனாக மாற்றிக் கொண்டேன். என்னுடைய சான்றிதழிலும் இந்து என்ற இடத்தில் இசுலாமியர் என்று சட்டப்படி மாற்றிக் கொண்டேன். எனது நிறுவனத்தில் என்னுடன் வேலை பார்த்த ஒரு தோழர் ஒருவர் எனக்கு வேலூரை சேர்ந்த இசுலாமியர் ஒருவரின் மகளை பார்த்து எனக்கு திருமணம் செய்வித்தார். நான் இந்துவாக இருந்து இசுலாம் மார்க்கத்தை தழுவி கொண்டவன் என்பதும் எனது குடும்பத்தினர் இந்துவாக இருப்பதும் அவர்களுக்கு தெரிந்தும் அதை அவர்கள் ஒரு தடையாக கருதவில்லை. எனது பெற்றோர்களை அவர்கள் மிகுந்த கண்ணியத்துடன் தான் இன்றளவிலும் நடத்தி வருகிறார்கள். என்னுடைய மனைவியும் என்னுடைய தாய் தந்தையை தன்னுடைய தாய் தந்தையராக தான் பாவித்து வருகிறார். எனது பெற்றோர்களுக்கும் இசுலாம் மார்க்கத்தின் மீது ஈடுபாடு உண்டு என்றாலும் உறவினர்களின் அழுத்தத்தினால் இப்போதும் இந்துவாகவே இருக்கிறார்கள். அல்லா கூடிய விரைவில் அவர்களையும் விரைவில் என்னோடு வந்து சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது சகோதரரே என்று அவர் சொல்லி முடித்தபோது இந்த மனிதருக்குள் இவ்வளவு பெரிய கதை இருக்கிறதா என்ற பிரம்மிப்பு எனக்குள் ஏற்பட்டது.


முந்தையை தலைமுறைகளை போல் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த இன்றைய தலைமுறையினர் பிறப்பு என்பது முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவு என்ற கட்டுக்கதைகளுக்கு பயந்து அடிமையாக இருக்க விரும்பவில்லை என்பது அம்மனிதரின் பேச்சில் தெரிந்தது

No comments:

Post a Comment