Wednesday, February 11, 2015

மாணவ தோழமைகளுக்கு ஓர் வேண்டுகோள்



உலகத்தின் எந்தவொரு விடுதலை மற்றும் உரிமை மீட்பு போராட்டங்களின் வெற்றியும் தோல்வியிலும் மாணவர்களின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக தான் இது வரை இருந்து வருகிறது. இனியும் அப்படியே.. அதில் எந்தவொரு மாற்றமும் இருக்கபோவதில்லை. மாணவ பருவம் எதையும் பற்றிய கவலையின்றி களிக்க கூடிய ஒரு பருவம். அத்தகைய பருவத்தில் நமக்கு அருகாமையில் நடக்கிற அநீதிகளை கண்டு கொதித்தெழுந்து அதை எதிர்த்து போராட மனம் வருகிறதென்றால், அதன் பின்பு மானுடத்தின் மீதான எதிர்பார்ப்புகளற்ற அன்பே முக்கியமான ஒன்றாக இருக்கும்.
மாணவர்கள் தங்களுக்கு முன்பே நின்று கொண்டிருக்கிற அசூர பலம் பொருந்திய ஒரு அழிவு சக்தியை எதிர்த்து களமிறங்கி போராட துணிகிறபோது தங்களுக்கான ஆதரவு சக்தியை தங்களை சுற்றிலும் கட்டமைத்து விட்டே களம் இறங்குவது நல்லது. உணர்ச்சிவயப்பட்டு தொடங்குகிற எந்த செயலும் அது தொடங்கப்படுகிற வேகத்திலேயே மரணித்து விடும் . அதே நேரத்தில் உறங்கி கொண்டிருக்கிற சக மனிதர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி தொடுக்கப்படும் போராட்டங்களுக்கு முன்பு உலகின் எத்தகைய அழிவு சக்தியும் மண்டியிட்டு விடும். தென் அமெரிக்காவில் தோழர்கள் சேகுவேரா, காசுட்ரோ போன்றவர்களால் கட்டி எழுப்பப்பட்ட மக்கள் புரட்சியாகட்டும் , ருசியாவில் கொடுங்கோலன் “சார்” மன்னனுக்கு எதிராக தோழர் லெனின், சுடாலின் போன்றோரால் கட்டியெழுப்பட்ட பொதுவுடைமை புரட்சியாகட்டும் , தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக எழுந்த மாணவர் புரட்சியாகட்டும், அவையெல்லாம் அத்தகையதே. அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படாத எந்த செயலும் அதன் இலக்கை எட்டுவதில்லை.


மாணவர்களுடைய போராட்டம் மாணவர்கள் தங்களை கொள்கை ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் வளர்த்துக் கொண்டு சகமாணவர்களை சரியான முறையில் அரசியல்மயப்படுத்தி முன்னெடுக்கும்போது தான் அது வலுவான ஒன்றாக இருக்கும். மாணவர்களிடையே இருக்கும் சாதி மத ரீதியான பிளவுகளை களைந்தெடுக்காமல் சமூகத்தை பற்றிய சரியான புரிதலை சக மாணவர்களுக்கு ஏற்படுத்தாமல் முன்னெடுக்கப்படுகிற எந்தவொரு போராட்டமும் விசிலடிச்சான் குஞ்சுகளின் போராட்டமாக தான் இருக்கும். அப்படியான போராட்டத்தை முன்னேடுப்பவர்களின் பின்னிலைமை முன்னிலமையை விட மோசமாக முடிந்து விடக்கூடியதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். என்னென்றால் இங்கே மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி கல்லாகட்ட முனையும் சந்தர்ப்பவாத நரிகள் தான் அதிகம்.

நாவில் தேனையும் உள்ளத்தில் நஞ்சையும் வைத்துக் கொண்டலைகிற அத்தகைய நரிகளை உள்ளிணைத்து கொண்டு உரிமைக்கான போரில் வெற்றி கண்டு விடலாம் என்பது முதலுக்கே உலை வைக்கும் நடவடிக்கையே அன்றி வேறெதுவும் ஆகாது. அப்படிப்பட்ட நரிகள் உங்களுக்காக குழிவெட்டுபவர்களின் கையில் மண்வெட்டியாக செயல்படுபவர்கள். உண்மையான அர்பணிப்புடன் மாணவர்கள் ஆரம்பிக்கிற போராட்டங்களை அத்தகைய மண்வெட்டிகளின் கைகளில் ஒப்படைப்பது எத்தகைய கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து அதற்கேற்றார் போல் நடந்து கொள்வது நன்று. அப்படிப்பட்ட நரிகளை கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடினமான செயல் இல்லை. பொதுவாக அப்படிப்பட்ட நரிகள் ஒரே நேரத்தில் ரெண்டு படகுகளில் காலை விரித்து வைத்துக் கொண்டு பயணிக்க முற்படுபவையாக இருக்கும். பொதுவாக அவர்களிடம் “எங்கே ஆதாயம் இருக்கிறதோ அங்கே போய் நின்று கொள்ளும்” மரபணுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். சமூகத்தின் விடுதலைக்காக போராடுவதை விட அதிகாரத்தை எப்படி தங்களுடைய பிடிக்குள் கொண்டு வருவது என்பதை பற்றிய சிந்தனைகள் தான் அவர்களது முழு மனதையும் ஆக்கிரமித்து நிற்கும். இப்படியான அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்திவிட்டாலே போதும், மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தின் இலக்கை எளிதாக எட்டி விடலாம்.

சரியான முறையில் முன்னெடுக்கப்படாத போராட்டங்கள் ஒட்டைப் பானையில் நீர் நிரப்பி எல்லைகளற்ற பாலைவனத்தில் பயணம் செய்ய நினைப்பது போலன்றி வேறெதுவும் இல்லை


பின்குறிப்பு : மாணவர்களை உசுப்பேற்றி விட்டு அவர்களை சிக்கலில் மாட்ட வைத்து விட்டு தங்களுடைய வளைகளில் சொகுசாக உட்கார்ந்து காலத்தை கழிக்கும் நரிகளின் மீதான கோவத்திலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு சிக்கலின் உச்சாணி கொம்பில் போய் மாட்டி தங்களை தாங்களே வதைத்து கொள்ளும் மாணவ தோழமைகளின் மீதான கரிசனையிலும் எழுந்த ஓன்று


https://www.facebook.com/anthony.fernando.796/posts/703349516416013

No comments:

Post a Comment