Sunday, February 8, 2015

கிழக்காசியாவில் தமிழர்களின் சம்பா ஆட்டம்





இப்போது கம்போடியா என்றழைக்கப்படும் கிழக்காசிய நாடு தமிழர் பண்பாடுகளை அதிகளவிற்கு உள்வாங்கிய நாடு என்று சொன்னால் மிகையாகாது . உலகின் மிகப்பிரசித்தி பெற்ற அங்கோர் வாட் கோவில் இங்கே தான் உள்ளது.

அந்த பகுதியில் தான் கடல் வணிகத்திற்கு சென்ற தமிழர்கள் சுமந்து சென்ற தமிழர்களின் பண்பாடுகள் உள்வாங்கப்பட்ட ஒரு சம்பா (champa) அரசு அமைந்தது. தற்போது இந்த பகுதி வியநாம் கம்போடியா என்ற இரு நாடுகளுக்கிடையே பகிரப்பட்டு உள்ளது. அங்கே வாழும் மக்கள் சாம் (cham) என்று அழைக்கப்படுகின்றனர். சாம் மக்களின் எண்ணிக்கையில் இசுலாம் மற்றும் இந்து மதத்தினை பின்பற்றுகிறவர்கள் சமமாக இருக்கிறார்கள். பொதுவாக கம்போடியா நாட்டை சேர்ந்த சாம் மக்கள் இசுலாமியர்களாகவும். வியட்நாம் நாட்டை சேர்ந்த சாம் இனத்து மக்கள் இந்துக்களாகவும் இருக்கிறார்கள்.

சாம் இன மக்களிடம் தமிழர்களின் மரபணுக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் தற்போதைய இந்திய துணைக்கண்டத்தில் வாழும் சமூக குழுக்களில் தமிழர்கள் தான் மிக பெரிய அளவில் கடல் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள். அதே போல தமிழர்களில் கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்களில் இந்துக்களும் இசுலாமியர்களும் சரி சமாமாக இருந்திருக்கின்றனர். இணைந்தே கடல் வாணிபத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதனால் தான் சாம் சமூகத்தில் இசுலாமியர்களும் இந்துக்களும் சரிவிகித அளவில் காணப்படுகின்றனரோ என்னவோ. சம்பா நாட்டை ஆண்ட மன்னர்களில் இருவரின் பெயரில் ஒருவர் பெயர் பத்ரவர்மன் (Bhadravarman) - 380 to 413 AD, இன்னொருவர் பெயர் சாம்புவர்மன் Sambhuvarman - 529 AD.

அதே போல இந்த "சாம்" என்ற சொல்லுக்கு இணையான சாம்பவர், சாம்பசிவம், சம்புவராயர், சம்பன் என்ற சொல்லாடல்கள் தமிழகத்தில் ஒரு சில சமூக குழுக்களிடையே இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.

அவற்றில் சாம்பவர் என்பது பறையர்களில் ஒரு கிளை சமூகத்திலும், சாம்பசிவம் என்பது பெயர் முதலியார் பிள்ளை போன்ற மக்களிடையே பெரிய அளவில் வழங்கப்படும் (அங்கோர் வாட் கோவில் ஒரு சிவன் கோவில் என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்) பெயராகவும், சம்புவராயர் என்பது வன்னியர் என்றழைக்கப்படும் பௌத்த பாரம்பரியம் கொண்ட பள்ளி என்ற சமூக குழுவிலும், சம்பன் குலம் என்பது தற்போது மறவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சமூக குழுக்களில் உள்ள ஒரு கிளை கொத்தாகவும் உள்ளது.

அதே போல் மற்றுமொரு விசயமும் நினைவில் கொள்ள வேண்டும். "பத்ம சாம்பவா" என்பது ஒரு புத்த துறவியின் பெயர் கூட. தமிழர்கள் பெரிய அளவில் புத்த மார்க்கத்தையும் சமண மார்க்கத்தையும் பின்பற்றிய வரலாற்று உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய இசுலாமிய தமிழர்களில் பெரும்பான்மையானோர் முன்பு சமண மதத்தை பின்பற்றியதும் சைவ மதத்தினர் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை தாக்குபிடிக்க முடியாமல் இசுலாம் மார்க்கத்தை தழுவினர் என்று கருதப்படுவதும் உண்டு.

இந்த சம்பா என்ற கிழக்காசிய மாகாணம் தமிழ்நாட்டில் இருந்து கிழக்காசியாவிற்கு சென்றவர்கள் அங்கே தங்கி அங்குள்ள பெண்களை மனது உருவான மக்கள் திரளால் உருவான ஓன்று கருதப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம். இந்த மக்கள் தாய் வழி முறையை கொண்டவர்கள். அதாவது தந்தை வேறு இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். தாய் வழியில் (கேரளா சமூகத்தில் உள்ளது போல) தான் உறவுமுறை தொடரும்.

சாம் இனத்தை தோற்றுவித்தது போ நாகர் (PO NAGAR) என்ற பெயர் கொண்ட பெண் என்று கருதப்படுகிறது. இங்கே நாகர் என்பது இந்தியாவை சேர்ந்த ஒரு இனம் என்பதும் தமிழர்கள் முந்தைய காலத்தில் நாகர் என்றதொரு இனக் குழு இருந்ததும் இன்றளவிலும் நாகர் என்ற பெயர் கொண்ட இடங்களும் கோவில்களும் தமிழகத்தில் உண்டு என்பதையும் அதே போன்று நகர் என்பது மக்கள் வாழும் இடத்தையும் குறிக்க பயன்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சாம் இனம் தொற்றுவிக்கப்பட்டதை பற்றிய வேடிக்கையான கதை ஓன்று உண்டு. அதன்படி விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருத்தி கடலில் சந்தன மரக்கட்டையில் மிதந்து வந்ததாகவும் அவள் சீனாவை சேர்ந்த அரச குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து ரெண்டு பிள்ளைகளை பெற்றதாகவும் பின்பு சம்பா அரசின் ராணியாகவும் ஆனாள் என்றும் நம்பப்படுகிறது.

அந்தக்கதையில் வரும் சந்தனக்கட்டை ஒரு முக்கியமான தகவலை விட்டு செல்கிறது. அது தமிழ மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் உலகத்தரம் வாய்ந்த சந்தனக்கட்டைகள் விளைகிறது என்பதும் பண்டைய காலத்தில் தமிழர்களின் கடல் வாணிபத்தில் சந்தனக் கட்டை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே போல் சம்பா என்ற பெயருடைய அரிசி உலகத்தில் தமிழகத்தில் தான் காணப்படுகிறது.

பிறிதோர் செய்தி, தற்போது சம்பா மாகாணத்தின் ஒரு பகுதி காணப்படும் நாடான கம்போடியாவின் மன்னர் பெயர் Norodam Sihamoni. அதில் ரெண்டாவது பெயர் சிகாமணி என்ற தமிழ் பெயரோடு நன்கு பொருந்தி போவதை பார்க்கலாம்

நிறைய எழுதலாம் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன் ..இதைப்பற்றிய விவாதங்கள் தொடரும் போது மேல் கொண்டு பேசலாம் என்று இருக்கிறேன்

கருத்துக்களும் திருத்தங்களும் வரவேற்கப்படுகின்றன.


No comments:

Post a Comment