Monday, February 9, 2015

மூளையை குப்பை தொட்டியாக்குவது எப்படி ?





                                                                      நம்ம ஊர்ல தமிழை கலப்பிலாமல் பேசுபவர்களை கண்டவுடன் "வந்துட்டான் பாரு தமிழ் கிறுக்கன்", "யையா இவன் தொல்லை தாங்க முடியாதுடா", "யோவ் என்ன நக்கலா" என்று சல்லியடித்து கொண்டு தமிழோடு பல மொழிகளையும் கலந்து பேசுவதை ஏதோ STATUS SYMBOL என்று கருதிக் கொண்டலையும் அறிவுக்கொழுத்திகள் வகை தொகையில்லாமல் காணப்படுவதுண்டு.

ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை என்னவென்றால், பல்வேறு மொழிகளில் ஆளுமை மிக்கவர்கள் அந்த ஒவ்வொரு மொழிகளையும் அவற்றிற்குரிய தனித்தன்மையோடு ஏனைய மொழிக் கலப்பில்லாமல் பேசுகிறவர்களாக இருப்பார்கள். ஒரு மொழியில் ஏனைய மொழியை கலந்து பேசுகிறவர்களுக்கு தாய் மொழியில் கூட ஒழுங்காக பேச எழுத தெரியாது என்பது தான் உண்மை.

மனித மூளை என்பது பல அடுக்குகளை கொண்ட மடிப்பறைகள் போன்றது. மூளையில் மொழிக்கான மடிப்பறை பல உள்ளறைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அறை என ஒதுக்கப்பட்டு இருக்கும். மனிதனுக்கு முதலாவது அறிமுகமாகும் மொழி தாய் மொழி என வகைப்படுத்தப்பட்டு முதல் வரிசையில் வைக்கப்பட்டு இருக்கும் ஏனைய மொழிகள் அவற்றை அவை கற்றுக்கொள்ளப்படும் கால அளவின்படி வரிசைப்படுத்தப்பட்டு அட்டவணைப்படி வெவ்வேறு அறைகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மொழிக்குமான சொற்கள் அந்தந்த அறைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

மொழிகளை கலந்து பேசுகிறவர்களுக்கு அவர்கள் பேசுகிற சொற்கள் சரியான முறையில் சேமிக்கப்படாமல் தாறுமாறாக சம்பந்த சம்பந்தமில்லாமல் சேமித்து வைக்கப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒரு குறுப்பிட்ட மொழியில் பேச எழுத முற்படும் போது அவர்களுடைய மூளை அந்த மொழிக்கான சொற்களை எடுக்க முற்படும் போது குழப்பமடைந்து திணற ஆரம்பித்து விடும். ஒரு கட்டத்தில் அவர்களுடைய மூளை சிந்திப்பதை நிறுத்தி விடும். ஒரு எடுத்து காட்டிற்கு

"நான் hosptial போனேன் ", "Ball ஐ catch பிடித்தேன்" என்று தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுபவர்களின் மூளை hospital, ball, catch மூன்றையும் தமிழ் சொற்களாக கருதி அவற்றை தாய் மொழிக்கான அறையில் பொட்டு வைத்து விடும். பின்பு அவர்கள் ஆங்கிலத்தில் அதே வாக்கியத்தை பேசுகிறார்கள் என்று வைத்து கொள்வோம் , எடுத்துக்காட்டிற்கு " I WENT TO HOSPITAL", "CATCH THE BALL" என்ற சொற்றொடர்களை எடுத்து கொள்வோம். இப்போது ஏற்கனவே தமிழ் மொழிக்கான மடிப்பறைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் hospital, ball, catch என்ற மூன்று சொற்களையும் எப்படி எடுத்துக் கொள்வது என்று மூளை குழம்பி நிற்கும். பிறகு ஒரு கட்டத்தில் ஆங்கிலத்திற்கான மடிப்பறையிலும் எதற்கும் பயன்படுமே என்ற ரீதியில் போட்டு வைத்து கொள்ளும். ஒரு கட்டத்தில் மூளை கிட்டத்தட்ட சம்பந்தப்பட்டவர்களால் ஒரு குப்பை தொட்டியாக மாற ஆரம்பித்து விடும். இப்படி எந்த ஒரு மொழியையும் மொழியை பிற மொழி கலப்போடு பேச பேச ஒரு மொழிக்கான சொல்லே பலமுறை நகலெடுக்கப்பட்டு பல்வேறு அறைகளிலும் திணிக்கப்பட்டு இருக்கும் .

அப்படியானவர்கள் ஒரு மொழியை பேச ஆரம்பிக்கும் போது அந்த மொழிக்கான சொற்களை தேடி தேடியே மூளை குழம்பி போய்விடும். எப்படி முக்கியமான ஒரு பொருளை தவற விட்டு விட்டு ஊரில் இருக்கிற அத்துணை குப்பை தொட்டிகளிலும் தேடிக் கொண்டலைபவர்கள் எப்படியான உளவியல் சிக்கலுக்கு உள்ளாவர்களோ அத்தகையதான உளவியல் சிக்கலுக்கு கொண்டு போய் விட்டு விடும்.

மொத்தத்தில் இறுதியில் மூளை அவர்களை குப்பைகளை தேடி அலைகிற நடைபிணமாக்கி விடும்.

No comments:

Post a Comment