Wednesday, February 11, 2015

மாணவ தோழமைகளுக்கு ஓர் வேண்டுகோள்



உலகத்தின் எந்தவொரு விடுதலை மற்றும் உரிமை மீட்பு போராட்டங்களின் வெற்றியும் தோல்வியிலும் மாணவர்களின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக தான் இது வரை இருந்து வருகிறது. இனியும் அப்படியே.. அதில் எந்தவொரு மாற்றமும் இருக்கபோவதில்லை. மாணவ பருவம் எதையும் பற்றிய கவலையின்றி களிக்க கூடிய ஒரு பருவம். அத்தகைய பருவத்தில் நமக்கு அருகாமையில் நடக்கிற அநீதிகளை கண்டு கொதித்தெழுந்து அதை எதிர்த்து போராட மனம் வருகிறதென்றால், அதன் பின்பு மானுடத்தின் மீதான எதிர்பார்ப்புகளற்ற அன்பே முக்கியமான ஒன்றாக இருக்கும்.
மாணவர்கள் தங்களுக்கு முன்பே நின்று கொண்டிருக்கிற அசூர பலம் பொருந்திய ஒரு அழிவு சக்தியை எதிர்த்து களமிறங்கி போராட துணிகிறபோது தங்களுக்கான ஆதரவு சக்தியை தங்களை சுற்றிலும் கட்டமைத்து விட்டே களம் இறங்குவது நல்லது. உணர்ச்சிவயப்பட்டு தொடங்குகிற எந்த செயலும் அது தொடங்கப்படுகிற வேகத்திலேயே மரணித்து விடும் . அதே நேரத்தில் உறங்கி கொண்டிருக்கிற சக மனிதர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி தொடுக்கப்படும் போராட்டங்களுக்கு முன்பு உலகின் எத்தகைய அழிவு சக்தியும் மண்டியிட்டு விடும். தென் அமெரிக்காவில் தோழர்கள் சேகுவேரா, காசுட்ரோ போன்றவர்களால் கட்டி எழுப்பப்பட்ட மக்கள் புரட்சியாகட்டும் , ருசியாவில் கொடுங்கோலன் “சார்” மன்னனுக்கு எதிராக தோழர் லெனின், சுடாலின் போன்றோரால் கட்டியெழுப்பட்ட பொதுவுடைமை புரட்சியாகட்டும் , தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக எழுந்த மாணவர் புரட்சியாகட்டும், அவையெல்லாம் அத்தகையதே. அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படாத எந்த செயலும் அதன் இலக்கை எட்டுவதில்லை.


மாணவர்களுடைய போராட்டம் மாணவர்கள் தங்களை கொள்கை ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் வளர்த்துக் கொண்டு சகமாணவர்களை சரியான முறையில் அரசியல்மயப்படுத்தி முன்னெடுக்கும்போது தான் அது வலுவான ஒன்றாக இருக்கும். மாணவர்களிடையே இருக்கும் சாதி மத ரீதியான பிளவுகளை களைந்தெடுக்காமல் சமூகத்தை பற்றிய சரியான புரிதலை சக மாணவர்களுக்கு ஏற்படுத்தாமல் முன்னெடுக்கப்படுகிற எந்தவொரு போராட்டமும் விசிலடிச்சான் குஞ்சுகளின் போராட்டமாக தான் இருக்கும். அப்படியான போராட்டத்தை முன்னேடுப்பவர்களின் பின்னிலைமை முன்னிலமையை விட மோசமாக முடிந்து விடக்கூடியதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். என்னென்றால் இங்கே மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி கல்லாகட்ட முனையும் சந்தர்ப்பவாத நரிகள் தான் அதிகம்.

நாவில் தேனையும் உள்ளத்தில் நஞ்சையும் வைத்துக் கொண்டலைகிற அத்தகைய நரிகளை உள்ளிணைத்து கொண்டு உரிமைக்கான போரில் வெற்றி கண்டு விடலாம் என்பது முதலுக்கே உலை வைக்கும் நடவடிக்கையே அன்றி வேறெதுவும் ஆகாது. அப்படிப்பட்ட நரிகள் உங்களுக்காக குழிவெட்டுபவர்களின் கையில் மண்வெட்டியாக செயல்படுபவர்கள். உண்மையான அர்பணிப்புடன் மாணவர்கள் ஆரம்பிக்கிற போராட்டங்களை அத்தகைய மண்வெட்டிகளின் கைகளில் ஒப்படைப்பது எத்தகைய கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து அதற்கேற்றார் போல் நடந்து கொள்வது நன்று. அப்படிப்பட்ட நரிகளை கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடினமான செயல் இல்லை. பொதுவாக அப்படிப்பட்ட நரிகள் ஒரே நேரத்தில் ரெண்டு படகுகளில் காலை விரித்து வைத்துக் கொண்டு பயணிக்க முற்படுபவையாக இருக்கும். பொதுவாக அவர்களிடம் “எங்கே ஆதாயம் இருக்கிறதோ அங்கே போய் நின்று கொள்ளும்” மரபணுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். சமூகத்தின் விடுதலைக்காக போராடுவதை விட அதிகாரத்தை எப்படி தங்களுடைய பிடிக்குள் கொண்டு வருவது என்பதை பற்றிய சிந்தனைகள் தான் அவர்களது முழு மனதையும் ஆக்கிரமித்து நிற்கும். இப்படியான அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்திவிட்டாலே போதும், மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தின் இலக்கை எளிதாக எட்டி விடலாம்.

சரியான முறையில் முன்னெடுக்கப்படாத போராட்டங்கள் ஒட்டைப் பானையில் நீர் நிரப்பி எல்லைகளற்ற பாலைவனத்தில் பயணம் செய்ய நினைப்பது போலன்றி வேறெதுவும் இல்லை


பின்குறிப்பு : மாணவர்களை உசுப்பேற்றி விட்டு அவர்களை சிக்கலில் மாட்ட வைத்து விட்டு தங்களுடைய வளைகளில் சொகுசாக உட்கார்ந்து காலத்தை கழிக்கும் நரிகளின் மீதான கோவத்திலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு சிக்கலின் உச்சாணி கொம்பில் போய் மாட்டி தங்களை தாங்களே வதைத்து கொள்ளும் மாணவ தோழமைகளின் மீதான கரிசனையிலும் எழுந்த ஓன்று


https://www.facebook.com/anthony.fernando.796/posts/703349516416013

Tuesday, February 10, 2015

கடலோடிகள் ஒரு சிறு குழுவா ?





                      நெய்தல்
நிலத்தை மூலமாக கொண்ட கடலோடிகள் சமூகம் சின்னதொரு சமூகம் கிடையாது அது பல விதமான தொழில் நுணுக்கங்களை அறிந்த மிகப்பெரும் மனித சக்தியை கொண்ட கொண்ட ஒரு பெரும் சமூகமாக தான் இருந்திருக்கிறது.

ஏனைய நாட்டவர்கள் கடலை மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தி கொண்டிருந்த நாட்களில் தம்ழியாகத்தை சேர்ந்தாக கடலோடிகள் உலகத்தின் மறு மூலைகளை தேடி பயணித்தவர்கள். கிழக்காசியா முழுவதையும் தங்களது துடுப்புகளால் அளவேடுத்தவர்கள். தமிழர்களின் படைப்புகளை பாய்மரக் கப்பல்களில் ஏற்றி சென்று உலகத்தின் பேரரசர்களை பிரமிக்க வைத்தவர்கள். கடல் கடந்து போனாலும் தங்களை ஏற்றுக் கொண்ட குடிகளை ஏய்க்காமல் அவர்களோடு கலந்தவர்கள்.
 
அவர்களுக்கென்று
வானவியல் அறிஞர்கள், நெசவு செய்பவர்கள் குறிப்பாக வாதிரியார்கள், பருத்தி நூலில் இருந்து பாய்மரத்தை நெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், காலத்தை குறித்து கொடுப்பவர்கள் (வள்ளுவர்கள், கணியர்கள்), மரம் மற்றும் இரும்பு வேலைகளில் தேர்ந்தவர்கள், போர்க்கலையில் தேறியவர்கள், வியாவார நுணுக்கம் அறிந்தவர்கள் , அரசியல் சாணக்கியர்கள் என ஒரு பெரும் கூட்டமே இருந்திருக்கிறது ,....
பார்ப்பனியம் சோழர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் மண்ணை ஆக்கிரமித்த போது குடுமிகள் கடலோடிகள் நடுவிலும் ஊடுருவினார்கள் கூடவே நகரவும் செய்தார்கள். கடலோடிகளுக்கு காலத்தையும் வானவியலையும் பற்றி போதித்தவர்கள் அவர்களிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டு அந்த இடத்தை குடுமிகள் நிரப்பினார்கள். தமிழர்களின் கடல் மேலாண்மை அவர்களுக்கு பொறாமையை தந்திருக்கலாம். அதன் விளைவு "கடல் கடத்தல்" பாவம் என போதிக்கப்பட்டது . கடலோடி சமூகத்தின் நுணுக்கமான வலைப்பின்னல் ஒவ்வொன்றாக கிழித்து எறியப்பட்டது. அவர்களின் வாழ்வாதரம் பிடுங்கி எறியப்பட்டபோது ஒருவரையொருவர் விட்டு நகர்ந்து ஒருவருக்கொருவர் அன்னியராகி போனார்கள்.. சிலர் சமவெளிகளை நோக்கி நகர்ந்தார்கள். சிலர் மீன் பிடிப்பது குலத் தொழில் என்றளவிற்கு சுருங்கி போனார்கள.


மொத்தத்தில் தமிழர்களின் பன்னாட்டு தொடர்பில் பார்ப்பனியத்திற்கு விளக்கு பிடித்த பிற்கால சோழர்களின் இறுதிக் காலத்தில், உலகத்தின் மொத்த கடலையும் தங்கள் துடுப்புகளால் அளந்த கடலோடிகளின் திறமைகளுக்கு முடிவுரை எழுதப்பட்டது.

தமிழ்க் குடிகளின் அழிவின் ஆரம்பப் புள்ளி



                                                    நேற்று முகநூலில் இருக்கும் பெரியவர் ஒருத்தர் என்னுடைய “கிழக்காசியாவில் தமிழர்கள் நடத்திய ஆட்டம்” என்ற கட்டுரையை படித்து விட்டு அதில் நான் பதிந்து இருந்த கருத்துக்களை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது பேச்சு அப்படியே பறையர் சமூகத்தை பற்றி திரும்பியது. அந்த பேச்சுகளின் மொத்தத்தையும் கீழே கட்டுரையாக வடித்து இருக்கிறேன். கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு .

                  உலகின் பல்வேறு மூலைகளில் முரண்பாடுகளின் உச்சத்தை தொட்டு நிற்கும் மனிதர்களை கூட ஒன்றிணைத்து ஒரு அமைப்பாக்கி விடலாம்.ஆனால் இன்றைக்கு பறையர் என்று வழங்கப்படுகிற சமூகத்தை ஓரணியில் திரட்டுவது மிகக் கடுமையான செயல். அந்த காலங்களில் அறிவுசார் துறைகளில் வல்லுனர்களாக தனித்தனியாக ஆவர்த்தனம் பண்ணியதால் என்னவோ அவர்கள் மரபணுக்களிலும் அது புகுந்து விட்டது. ஒருவர் பேச்சை மற்றொருவர் மதிப்பது என்பது அவர்களிடத்தில் காணப்படும் மிக அரியப் பண்பு. முரண்பாடுகளோடு முட்டிக் கொள்வது அவர்களின் மரபணுக்களில் ஊறிப்போன ஓன்று. ஆனால் அதே நேரத்தில் எதிலும் முரண்பட்டு அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி நிற்கும் அந்த பண்பால் மிகச் சிறந்த அறிவுசார் ஆளுமைகளையும் அச்சமூகம் தந்திருக்கிறது என்பதையும் மறுத்து விட முடியாது. ஒரு கட்டத்தில் தமிழ் சமூகத்தின் அடிமட்டத்தில் தள்ளப்பட்டிருந்தாலும் அந்த நிலைமையில் கூட அச்சமூகத்தால் அயோத்திதாச பண்டிதர்களை உருவாக்க முடிந்தது என்பதையும்  கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் குடிகளில் முதன் முதலாக தங்களுக்கென தனி பத்திரிகையை நடத்தியது அவர்கள் தான். அதை நடத்தியது அயோத்திதாச பண்டிதர். “பார்ப்பானுக்கு மூத்தோன் பறையன் ” என்று சொல்லாடலில் கூட சில வரலாற்று உண்மைகள் இருக்கிறது.  

முற்கால தமிழ் அரசுகளின் கட்டமைப்பில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள் தாம் வள்ளுவ குடிகள் . ஆனால் அவர்களுடைய தான் தோன்றித்தனம் தான் ஒட்டு மொத்த தமிழ் குடியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. தமிழ் அரசர்களுக்கிடையே அன்னியர்களை ஊடுருவ விட்டதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழ் அரசர்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்ததால் அரசவை சுகங்களுக்கு குறிப்பாக தமிழ் அரசர்களின் வட இந்திய வெற்றிகளுக்கு பிறகு வட நாட்டில் இருந்து  வெள்ளை நிற பெண்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் தமிழ் மண்ணிற்கு இழுத்து கொண்டு வந்து குடியமர்த்தியத்தில் அரசர்களுக்கு ராசா குருக்களாக இருந்த வள்ளுவர்களின் ஆலோசனை இல்லாமல் நடந்திருக்காது.

விந்திய மலைக்கு அப்பால் இருந்து கொண்டு வரப்பட்ட பெண்களை இங்கே அந்தப்புரங்களில் அடைத்து வைத்து பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்தது தான் ஒரு கட்டத்தில் தமிழ் இனப்பெண்களையும் இரும்பால் சூடு போட்டு பாலியல் அடிமைகளாக அந்தப்புரங்களிலும் கோவில்களிலும் அடைத்து வைக்கப்படும் சூழலுக்கு கொண்டு சென்று விட்டது தமிழ் அரசர்களும் அவர்களுக்கு இராசகுருக்களாக இருந்தவர்களும், அரச அதிகார மட்டத்தில் இருந்தவர்களும் அந்தப்புரமே கதியென்று கிடந்ததால் தமிழர்களின் சமூக கட்டமைப்பு மெதுவாக உடைய ஆரம்பித்தது. விந்திய மலைக்கு அப்பால் இருந்து கூட்டி வரப்பட்ட பெண்களோடு உடன் வந்த ஆரியர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அரசர்களோடும் இராசகுருக்களான வள்ளுவர்களோடும், அரச அதிகார மட்டத்தில் இருந்தவர்களோடும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு கலக்க ஆரம்பித்தார்கள். அப்படி கலக்க ஆரம்பித்ததன் விளைவு தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் என்றதொரு புதிய சமூகக் குழு உருவானது. தஞ்சை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வாழும் “அய்யங்கார்” பிரிவை சேர்ந்த பிராமணர்களில் பலரின் மரபணுக்கள் வள்ளுவ குடிகளை சேர்ந்தவர்களின் மரபணுக்களோடு ஒத்துபோவதாக ஒரு ஆய்வறிக்கை கூட வந்திருக்கிறது. வள்ளுவர்கள் மற்றும் ஏனைய தமிழ் அரசர்களின் அதிகார வட்டத்தில் இருந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாக அகற்றப்பட்டு அல்லது உள்வாங்கப்பட்டு அந்த பொறுப்புகளில் புதிதாக கலந்து கட்டி உருவாக்கப்பட்ட பிராமணர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். வள்ளுவர்கள்  மற்றும் கணியர்கள் என்றழைக்கப்பட்ட மக்களின் வானவியல் மற்றும் ஏனைய அறிவுசார் திறமைகளை பிராமணர்கள் கற்றுக் கொண்டு அந்த துறைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். தமிழ் மண்ணில் மனுவின் கொள்கைகள் கொண்டுவந்து நங்கூரம் பாய்ச்சினர். தமிழ் குடிகள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மக்களின் சொத்துக்களும் நிலங்களும் உடமைகளும் பறிக்கப்பட்டு அவை கோவில் கருவூலத்தில் சேர்க்கப்பட்டன. பிராமணர்களுக்கு பிரம்மோதய நிலங்கள் என்ற பெயரில் நிலங்கள் வாரி வழங்கப்பட்டன. தமிழ் குடிகள் மீதான அடக்குமுறைகளுக்கு காரணமென வள்ளுவ குடிகளை சேர்ந்தவர்களும் அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். இப்படி ஏனைய தமிழ் குடிகளின் கோவத்தை வள்ளுவ குடிகளின் மீது திசை திருப்பியதில் பிராமணர்கள் வெற்றி கண்டனர். பிராமணர்களின் அடக்குமுறைகளுக்கு எதிர்த்து நின்ற பல்வேறு தமிழ் குடிகளையும் சேர்ந்தவர்கள் பறையர்கள் என்றழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அறிவுசார் துறைகளையடுத்து அதிகார மையத்தை ஆக்கிரமித்து இருந்த பிராமணர்களால் தமிழர்களிடையே இருந்து களையெடுக்கப்பட்ட மற்றுமொரு விசயம் ஒவ்வொரு தமிழ்க்குடியை சேர்ந்தவர்களின் ரத்தத்தில் ஊறிக் கிடந்த “தமிழ் போர்க்கலைகள்” பற்றிய நுண்ணறிவு. தமிழர்களுக்கு போர்க்கலையை சொல்லித்தந்த குருக்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். போர்க்கலைகளையும் அறிவுசார் நுண்கலைகளையும் சுமந்த பனையோலையால் செய்யப்பட்ட ஏடுகள் “பழைய கழிதலும் புதியதன புகுதலும்” என்ற பெயரால் பார்ப்பனர்களால் தமிழர்களை கொண்டே திட்டமிட்டு துடைத்து எறியப்பட்டன. தமிழ குடிகள் வெள்ளைத்தோல்களை கண்ட மோகத்தில் மூழ்கி கிடக்க அவர்களுடைய கோவணங்கள் அவர்களுக்கு தெரியாமல் உருவி எறியப்பட்டன. அம்மணமாக்கப்பட்ட போதும் வெட்கத்தால் மூடப்பட்டு முடங்கி கிடப்பதை தவிர அவர்களுக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. தப்பியோடிய போதிதர்மர்கள் அவர்கள் சென்று தஞ்சம் புகுந்த கிழக்காசிய குடிகளால் கொண்டாடப்பட்டனர்.

கடலோடிய தமிழர்களோடு பயணித்த வள்ளுவ  கணியர்களின் இடத்தில் பார்பனர்கள் தங்களை இருந்திக் கொண்டார்கள் எங்கெல்லாம் தமிழர்களின் பண்பாட்டு முத்திரைகள் எடுத்து செல்லப்பட்டதோ அங்கெல்லாம் கடல் கடந்து சென்ற பார்ப்பனர்களால் அங்கே இருந்த தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் வெகு நேர்த்தியாக திட்டமிட்டு துடைத்து எடுக்கப்பட்டன. வட மொழி கூறுகளும் ஆரிய பண்பாடுகளும் தமிழர்கள் கடல் கடந்து சென்றமர்ந்த இடங்களில் திணிக்கப்பட்டன. காற்றின் போக்கை  பயன்படுத்தி கப்பல்களை செலுத்த உதவிய பாய்மரத் துணிகளை நெய்து கொடுத்த தமிழ் குடிகளின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இன்றளவிலும் அவர்கள் வாதிரியார்கள் என்ற பெயரில் தமிழகத்தின் நெய்தல் நிலங்களையொட்டிய பகுதிகளிலும் அதை யொட்டிய சமவெளி பகுதிகளிலும் வாழ்கிறார்கள் புத்தர் திருமாலாக உருமாற்றப்பட்டு கடலில் படுத்து கிடப்பதாக கட்டமைக்கப்பட்டார். கடல் கடந்து செல்வது மிகப்பெரிய பாவமென கருதப்பட்டது. அதோடு திரைகடல் ஓடி திரவியத்தையும் பண்பாட்டையும் மெருகேற்றிய தமிழ் குடிகளின் ஓட்டத்திற்கு முடிவு கட்டப்பட்டது.

அறிவுசார் துறைகளில் இருந்த வள்ளுவர், கணியர், தற்போது நாடார் என்றழைக்கப்டும் சாணார் (சமணர் என்பது தான் மருவி சாணர் என்றானது) போன்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் கல்வி கற்பது தடைசெய்யப்பட்டு அவர்களுடைய உரிமைகள் முற்றிலுமாக இம்மண்ணில் இருந்து புடுங்கி எறியப்பட்டது. சமணர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் பிராமணர்களால்  வெகுவாக கூர் தீட்டப்பட்டது. இன்றைக்கு கூட முந்தைய காலத்தில் பௌத்தர்களாக பறையர், பள்ளி போன்ற குடிகளுக்கும் சாணார் என்று திறக்கப்பட்ட சமணர் குடிகளும் பல இடங்களில் ஒத்துப் போவதில்லை. மரபணுக்களின் தொடர்ச்சியோ என்னவோ ?. சமணர்களை கொண்டு பௌத்தர்கள் வேட்டையாடப்பட்டார்கள். பின்பு சமணர்கள் தனிமையாக்கப்பட்ட போது தமிழ் மண்ணில் உருவான மற்றுமொரு கலப்பின குடியான வெள்ளாளர்களால் சைவத்தின் பெயரால் சமணர்கள் கடுமையாக நசுக்கப்பட்டார்கள். அடக்குமுறைகளுக்கு தாக்குபிடிக்க முடியாத சமணர்கள் பலர் இசுலாம் மார்க்கத்தை தழுவினார்கள். ஏனையவர்கள் சாணார்கள் என்று இழித்துரைக்கப்பட்டு பனையேறுபவர்களாக மாற்றப்பட்டனர். பனையும்  பனை சார்ந்த தொழில்களும் இழிவான தென்று பரப்பட்டது அத்தொழிலை செய்தவர்கள் இழிசாதியை சேர்ந்தவர்கள் என்ற பிம்பத்தை ஏனைய மக்களின் மனதில் பிராமணர்கள் உருவாக்கினர். வள்ளுவர்கள் தங்களது நுண்ணறிவுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல உதவிய ஏடுகளை உருவாக்க உதவிய பனையோலைகளை பதப்படுத்தும் தொழில் நுட்பம் முடக்கப்பட்டு அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நெறித்து நிறுத்தப்பட்டது.

 நெசவு தொழில் நுணுக்கங்களில் தேர்ந்த தமிழ் குடிகளின் வாய்ப்புகள் பிடுங்கப்பட்டு விந்திய மலைக்கு அப்பால் சவுராட்டிரத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள்  அவர்களது இடத்தில் அமர்த்தப்பட்டார்கள். ரோம கிரேக்க பேரரசர்களின் மானத்தை மறைக்க துணி நெய்து கொடுத்த தமிழ் குடிகளின் வாழ்வாதாரம் பிடுங்கி எறியப்பட்டது. தமிழ் குடிகள் ஒவ்வொன்றும் தங்களது இருப்பை தக்க வைத்து கொள்ள புதிய புதிய அடையாளங்களை தங்களுக்கு சூட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் யாரென்ற அறிவு அனுத்துகளை காட்டிலும் சிறியதாக சுருங்க ஆரம்பித்தது

தமிழ் குடிகளை பற்றிய பார்வைகளும் அலசல்களும் விரியும்........

Monday, February 9, 2015

கேள்வி என்ற ஞானத்திற்கும் வானத்திற்குமான தொடர்பு




எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கு
ஒன்றையும் விடாதே...
உன்னிருப்பையும் கேள்விக்குள்ளாக்கு
சுயத்தை வெறுத்து
எல்லாவற்றையும் துற,
அகத்தை சுத்தமாக்கு
கடைசி கசடையும்
தூக்கி எறியும்வரை
புதிதாய் ஆரம்பி
விடை கிடைக்கும் வரை தேடு
நிறுத்தி விடு என்பார்கள்
ஓடிக் கொண்டிரு
முடிந்து விட்டது என்பார்கள்
துவக்கி வை
தொற்றிக் கொண்டலைவதை விட்டு
உனக்கானதை தேர்ந்தெடு
பற்றிப் படரு
பார்வைகளை விசாலமாக்கி
வட்டத்தை விரிவுபடுத்து
விட்டம் வெறிப்பது நிறுத்தி
பரணை உடைத்து
உனக்கான வானத்தை
தலை நிமிர்த்தி பார்
நட்சத்திரங்களை தேடுவதல்ல
உன் கண்களின் வேலை
உனக்கான இடத்தை
எட்டாத உயரத்தில்
நிலை நிறுத்த
விண்ணை அளவெடு
வானம் உன் வசப்படும்


                                                                                                            --  இப்படிக்கு அந்தோணி

அன்னை பூலான் தேவி கொள்ளைக்காரியா ?






"ஜெயலலிதா என்னும் நவீன பூலான் தேவி" என்று முக நூல் நட்பில் இருக்கும் அண்ணன் ஒருத்தர் ஒரு பதிவை ஆரம்பித்து இருந்தார் . எனக்கு ஒரு நிமிடம் பக்கேன்றாகி விட்டது. அதெப்படி ஆதிக்க வெறி பிடித்த ஒரு பார்ப்பன மாமியோடு சாதி ஆதிக்க வெறியர்களால் கடுமையான வன்முறைக்களுக்குகுள்ளளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்தின் அடையாளமான பூலான் தேவியை அடையாளப்படுத்த முடிகிறது.

ஊடகங்கள் கட்டமைக்கும் அத்துனை பிம்பங்களையும் நம்புவதால் வருகிற விளைவு தான் இது. பார்ப்பனிய ஆதிக்க சாதி ஊடகங்கள் அன்னை பூலான் தேவி உயிரோடு இருக்கும் போதும் சரி, இல்லை அவர்கள் மறைந்த பின்பும் சரி தங்களுக்கு வசதியாக " அன்னை பூலான் தேவி மீது ஆதிக்க சாதி வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட உடல் மற்றும் மனரீதியிலான வன்முறைகளை மறைத்து விட்டு அவர்களுடைய மூளை முழுவதும் வியாபித்து இருக்கும் பூணூல் கட்டமைக்கும்  வன்மத்தை மட்டுமே கக்கி வந்திருக்கிறது

நடிகர் வடிவேலு கூட தனது திரைப்படங்களில் அது போன்ற இழிவான செயல்களை செய்து இருந்தார் ..

உயர்சாதியை சேர்ந்த ஒரு அபயா உருவாக்கப்படுவதற்கு முன்பே  தனது உடலில் உருவாக்கப்பட்ட ஆயிரமாயிரம் அபயாக்களை  தாங்கி கொண்டு அலைந்தவள் அன்னை பூலான் தேவி .

தன்னுடைய சுயசரிதையில் தன மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையை பின்வருமாறு விவரிக்கிறார் .

"அந்த ஊரின் ஆதிக்க சாதி தாக்கூர் ஆண்களால் எனது உடைகள் களையப்பட்டு அந்த ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டேன் . அங்கு உள்ள னைத்து பெண்களும் சிறுமிகளில் இருந்து வயதான கிழவிகள் வரை வேடிக்க பார்த்தார்களே தவிர அவர்கள் வீட்டு ஓரத்தில் கிடந்த ஒரு அழுக்கு துணியை கூட என்னை நோக்கி வீசவில்லை. என்னை அவர்கள் அங்கே சக பெண்ணாக பார்க்கவில்லை. ஒரு ஒடுக்கப்பட்ட நிசாத் சாதியை சேர்ந்த படகோட்டியின் மகளாகவே பார்த்தார்கள்.

ஊர்வலத்தின் முடிவில் ஒற்றின் மத்தியில் நடுநாயகமாக அமைந்திருந்த ஒரு கம்பத்தில் என்னை கட்டு என்னை கட்டினார்கள். பஞ்சாயத்தில் முக்கியமானபொறுப்பில் இருந்த தாக்கூர் அங்கள் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின்பு என்னை அந்த ஒற்றில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் விருந்தாக்கினார்கள். உடல் கொடுத்த வழியை விட மனதில் ஏற்பட்ட வழியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்ல. என்னால் முனக மட்டுமே முடிந்தது. அந்த ஒற்றின் ஆண்களில் சிறுநீர் கழிக்க  குறி பிடிக்க தன் தாயின் உதவி தேவைப்படும் சிறு பையன்களில் இருந்து, சுடுகாட்டிற்கு தூக்கி செல்லப்படுவதற்காக காத்திருந்த வயதான கிழவர்கள் வரை அத்தனை பேரும் என் உடலின் மீது ஒரு பெரும் போரையே நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் அத்துணை செயல்களையும் அந்த ஆண்களையும் அந்த ஆண்கள் சிந்திய விந்துக்களையும்  தூக்கி சுமந்த கருப்பைகள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அப்போதிருந்த நிலையில் எனது உறுப்புகளை அவர்களிடம் அறுத்து கொடுத்து விட்டால் என்னை விட்டு விடுவார்களா என்ற எண்ணமே மிஞ்சியிருந்தது . இயலாமையின் உச்சத்தை உணர்ந்த தருணம் அது. பிற்காலத்தில் எனக்கு தைரியத்தையும் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் வலிமையையும் அந்தது அந்த நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது". நேரம் செல்ல செல்ல மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு  அமைதியாகி விட்டேன் . அசைவற்று கிடந்த ஏன் உடலை பார்த்ததும் ஒரு வயதான் பெண்மணி ஒரு செம்பில் தண்ணீரை எடுத்து வந்து எனக்கும் அவளுக்கும் நல்ல இடைவெளி இருக்குமாறு உயர்த்தி பிடித்துக் கொண்டு என்னுடைய வாயில் ஊற்றினாள். எங்கே நான் இறந்து போய் விட்டால் அவளுடைய வீட்டு ஆண்கள் கொலைக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி சிறைக்கு போக நேருமோ என்ற அச்சம் ஏற்படுத்திய கருணையாக இருக்கலாம். என்னுடைய மனதிற்குள் இப்போது என்னுடைய உயிரை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு ஆக்கிரமித்து இருந்தது .. பழி வாங்க வேண்டும். எனக்கு அவர்கள் ஏற்படுத்திய வலிகளை அவர்கள் உணர வேண்டும் என்ற குரல் எனக்குள் ஒழித்து கொண்டே இருந்தது. நான் அசைவற்று கிடந்ததை பார்த்து நான் இறந்து விட்டேன் என்றெண்ணி தாக்கூர்கள் என்னை ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு போய் வீசி எறிந்தார்கள்". என்று விவரித்து இருந்தார் ....

மேலயுள்ள அந்த பத்தியை  படித்து விட்டு  பூலான் தேவி யாரென்று  முடிவெடுங்கள்

தயவு செய்து உங்கள் சொல் விளையாட்டுகளுக்கு அன்னை பூலான் தேவியின் பெயரை ஊறுகாயாக்கி விடாதீர்கள்

https://www.facebook.com/photo.php?fbid=760936933990604&set=a.131181913632779.35108.100002229137896&type=1&ref=notif&notif_t=like

மூளையை குப்பை தொட்டியாக்குவது எப்படி ?





                                                                      நம்ம ஊர்ல தமிழை கலப்பிலாமல் பேசுபவர்களை கண்டவுடன் "வந்துட்டான் பாரு தமிழ் கிறுக்கன்", "யையா இவன் தொல்லை தாங்க முடியாதுடா", "யோவ் என்ன நக்கலா" என்று சல்லியடித்து கொண்டு தமிழோடு பல மொழிகளையும் கலந்து பேசுவதை ஏதோ STATUS SYMBOL என்று கருதிக் கொண்டலையும் அறிவுக்கொழுத்திகள் வகை தொகையில்லாமல் காணப்படுவதுண்டு.

ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை என்னவென்றால், பல்வேறு மொழிகளில் ஆளுமை மிக்கவர்கள் அந்த ஒவ்வொரு மொழிகளையும் அவற்றிற்குரிய தனித்தன்மையோடு ஏனைய மொழிக் கலப்பில்லாமல் பேசுகிறவர்களாக இருப்பார்கள். ஒரு மொழியில் ஏனைய மொழியை கலந்து பேசுகிறவர்களுக்கு தாய் மொழியில் கூட ஒழுங்காக பேச எழுத தெரியாது என்பது தான் உண்மை.

மனித மூளை என்பது பல அடுக்குகளை கொண்ட மடிப்பறைகள் போன்றது. மூளையில் மொழிக்கான மடிப்பறை பல உள்ளறைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அறை என ஒதுக்கப்பட்டு இருக்கும். மனிதனுக்கு முதலாவது அறிமுகமாகும் மொழி தாய் மொழி என வகைப்படுத்தப்பட்டு முதல் வரிசையில் வைக்கப்பட்டு இருக்கும் ஏனைய மொழிகள் அவற்றை அவை கற்றுக்கொள்ளப்படும் கால அளவின்படி வரிசைப்படுத்தப்பட்டு அட்டவணைப்படி வெவ்வேறு அறைகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மொழிக்குமான சொற்கள் அந்தந்த அறைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

மொழிகளை கலந்து பேசுகிறவர்களுக்கு அவர்கள் பேசுகிற சொற்கள் சரியான முறையில் சேமிக்கப்படாமல் தாறுமாறாக சம்பந்த சம்பந்தமில்லாமல் சேமித்து வைக்கப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒரு குறுப்பிட்ட மொழியில் பேச எழுத முற்படும் போது அவர்களுடைய மூளை அந்த மொழிக்கான சொற்களை எடுக்க முற்படும் போது குழப்பமடைந்து திணற ஆரம்பித்து விடும். ஒரு கட்டத்தில் அவர்களுடைய மூளை சிந்திப்பதை நிறுத்தி விடும். ஒரு எடுத்து காட்டிற்கு

"நான் hosptial போனேன் ", "Ball ஐ catch பிடித்தேன்" என்று தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுபவர்களின் மூளை hospital, ball, catch மூன்றையும் தமிழ் சொற்களாக கருதி அவற்றை தாய் மொழிக்கான அறையில் பொட்டு வைத்து விடும். பின்பு அவர்கள் ஆங்கிலத்தில் அதே வாக்கியத்தை பேசுகிறார்கள் என்று வைத்து கொள்வோம் , எடுத்துக்காட்டிற்கு " I WENT TO HOSPITAL", "CATCH THE BALL" என்ற சொற்றொடர்களை எடுத்து கொள்வோம். இப்போது ஏற்கனவே தமிழ் மொழிக்கான மடிப்பறைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் hospital, ball, catch என்ற மூன்று சொற்களையும் எப்படி எடுத்துக் கொள்வது என்று மூளை குழம்பி நிற்கும். பிறகு ஒரு கட்டத்தில் ஆங்கிலத்திற்கான மடிப்பறையிலும் எதற்கும் பயன்படுமே என்ற ரீதியில் போட்டு வைத்து கொள்ளும். ஒரு கட்டத்தில் மூளை கிட்டத்தட்ட சம்பந்தப்பட்டவர்களால் ஒரு குப்பை தொட்டியாக மாற ஆரம்பித்து விடும். இப்படி எந்த ஒரு மொழியையும் மொழியை பிற மொழி கலப்போடு பேச பேச ஒரு மொழிக்கான சொல்லே பலமுறை நகலெடுக்கப்பட்டு பல்வேறு அறைகளிலும் திணிக்கப்பட்டு இருக்கும் .

அப்படியானவர்கள் ஒரு மொழியை பேச ஆரம்பிக்கும் போது அந்த மொழிக்கான சொற்களை தேடி தேடியே மூளை குழம்பி போய்விடும். எப்படி முக்கியமான ஒரு பொருளை தவற விட்டு விட்டு ஊரில் இருக்கிற அத்துணை குப்பை தொட்டிகளிலும் தேடிக் கொண்டலைபவர்கள் எப்படியான உளவியல் சிக்கலுக்கு உள்ளாவர்களோ அத்தகையதான உளவியல் சிக்கலுக்கு கொண்டு போய் விட்டு விடும்.

மொத்தத்தில் இறுதியில் மூளை அவர்களை குப்பைகளை தேடி அலைகிற நடைபிணமாக்கி விடும்.

Sunday, February 8, 2015

கிழக்காசியாவில் தமிழர்களின் சம்பா ஆட்டம்





இப்போது கம்போடியா என்றழைக்கப்படும் கிழக்காசிய நாடு தமிழர் பண்பாடுகளை அதிகளவிற்கு உள்வாங்கிய நாடு என்று சொன்னால் மிகையாகாது . உலகின் மிகப்பிரசித்தி பெற்ற அங்கோர் வாட் கோவில் இங்கே தான் உள்ளது.

அந்த பகுதியில் தான் கடல் வணிகத்திற்கு சென்ற தமிழர்கள் சுமந்து சென்ற தமிழர்களின் பண்பாடுகள் உள்வாங்கப்பட்ட ஒரு சம்பா (champa) அரசு அமைந்தது. தற்போது இந்த பகுதி வியநாம் கம்போடியா என்ற இரு நாடுகளுக்கிடையே பகிரப்பட்டு உள்ளது. அங்கே வாழும் மக்கள் சாம் (cham) என்று அழைக்கப்படுகின்றனர். சாம் மக்களின் எண்ணிக்கையில் இசுலாம் மற்றும் இந்து மதத்தினை பின்பற்றுகிறவர்கள் சமமாக இருக்கிறார்கள். பொதுவாக கம்போடியா நாட்டை சேர்ந்த சாம் மக்கள் இசுலாமியர்களாகவும். வியட்நாம் நாட்டை சேர்ந்த சாம் இனத்து மக்கள் இந்துக்களாகவும் இருக்கிறார்கள்.

சாம் இன மக்களிடம் தமிழர்களின் மரபணுக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன. ஆரம்ப காலங்களில் தற்போதைய இந்திய துணைக்கண்டத்தில் வாழும் சமூக குழுக்களில் தமிழர்கள் தான் மிக பெரிய அளவில் கடல் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள். அதே போல தமிழர்களில் கடல் வணிகத்தில் ஈடுபட்டவர்களில் இந்துக்களும் இசுலாமியர்களும் சரி சமாமாக இருந்திருக்கின்றனர். இணைந்தே கடல் வாணிபத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதனால் தான் சாம் சமூகத்தில் இசுலாமியர்களும் இந்துக்களும் சரிவிகித அளவில் காணப்படுகின்றனரோ என்னவோ. சம்பா நாட்டை ஆண்ட மன்னர்களில் இருவரின் பெயரில் ஒருவர் பெயர் பத்ரவர்மன் (Bhadravarman) - 380 to 413 AD, இன்னொருவர் பெயர் சாம்புவர்மன் Sambhuvarman - 529 AD.

அதே போல இந்த "சாம்" என்ற சொல்லுக்கு இணையான சாம்பவர், சாம்பசிவம், சம்புவராயர், சம்பன் என்ற சொல்லாடல்கள் தமிழகத்தில் ஒரு சில சமூக குழுக்களிடையே இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.

அவற்றில் சாம்பவர் என்பது பறையர்களில் ஒரு கிளை சமூகத்திலும், சாம்பசிவம் என்பது பெயர் முதலியார் பிள்ளை போன்ற மக்களிடையே பெரிய அளவில் வழங்கப்படும் (அங்கோர் வாட் கோவில் ஒரு சிவன் கோவில் என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்) பெயராகவும், சம்புவராயர் என்பது வன்னியர் என்றழைக்கப்படும் பௌத்த பாரம்பரியம் கொண்ட பள்ளி என்ற சமூக குழுவிலும், சம்பன் குலம் என்பது தற்போது மறவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சமூக குழுக்களில் உள்ள ஒரு கிளை கொத்தாகவும் உள்ளது.

அதே போல் மற்றுமொரு விசயமும் நினைவில் கொள்ள வேண்டும். "பத்ம சாம்பவா" என்பது ஒரு புத்த துறவியின் பெயர் கூட. தமிழர்கள் பெரிய அளவில் புத்த மார்க்கத்தையும் சமண மார்க்கத்தையும் பின்பற்றிய வரலாற்று உண்மையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய இசுலாமிய தமிழர்களில் பெரும்பான்மையானோர் முன்பு சமண மதத்தை பின்பற்றியதும் சைவ மதத்தினர் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை தாக்குபிடிக்க முடியாமல் இசுலாம் மார்க்கத்தை தழுவினர் என்று கருதப்படுவதும் உண்டு.

இந்த சம்பா என்ற கிழக்காசிய மாகாணம் தமிழ்நாட்டில் இருந்து கிழக்காசியாவிற்கு சென்றவர்கள் அங்கே தங்கி அங்குள்ள பெண்களை மனது உருவான மக்கள் திரளால் உருவான ஓன்று கருதப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம். இந்த மக்கள் தாய் வழி முறையை கொண்டவர்கள். அதாவது தந்தை வேறு இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பர். தாய் வழியில் (கேரளா சமூகத்தில் உள்ளது போல) தான் உறவுமுறை தொடரும்.

சாம் இனத்தை தோற்றுவித்தது போ நாகர் (PO NAGAR) என்ற பெயர் கொண்ட பெண் என்று கருதப்படுகிறது. இங்கே நாகர் என்பது இந்தியாவை சேர்ந்த ஒரு இனம் என்பதும் தமிழர்கள் முந்தைய காலத்தில் நாகர் என்றதொரு இனக் குழு இருந்ததும் இன்றளவிலும் நாகர் என்ற பெயர் கொண்ட இடங்களும் கோவில்களும் தமிழகத்தில் உண்டு என்பதையும் அதே போன்று நகர் என்பது மக்கள் வாழும் இடத்தையும் குறிக்க பயன்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சாம் இனம் தொற்றுவிக்கப்பட்டதை பற்றிய வேடிக்கையான கதை ஓன்று உண்டு. அதன்படி விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருத்தி கடலில் சந்தன மரக்கட்டையில் மிதந்து வந்ததாகவும் அவள் சீனாவை சேர்ந்த அரச குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து ரெண்டு பிள்ளைகளை பெற்றதாகவும் பின்பு சம்பா அரசின் ராணியாகவும் ஆனாள் என்றும் நம்பப்படுகிறது.

அந்தக்கதையில் வரும் சந்தனக்கட்டை ஒரு முக்கியமான தகவலை விட்டு செல்கிறது. அது தமிழ மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் உலகத்தரம் வாய்ந்த சந்தனக்கட்டைகள் விளைகிறது என்பதும் பண்டைய காலத்தில் தமிழர்களின் கடல் வாணிபத்தில் சந்தனக் கட்டை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே போல் சம்பா என்ற பெயருடைய அரிசி உலகத்தில் தமிழகத்தில் தான் காணப்படுகிறது.

பிறிதோர் செய்தி, தற்போது சம்பா மாகாணத்தின் ஒரு பகுதி காணப்படும் நாடான கம்போடியாவின் மன்னர் பெயர் Norodam Sihamoni. அதில் ரெண்டாவது பெயர் சிகாமணி என்ற தமிழ் பெயரோடு நன்கு பொருந்தி போவதை பார்க்கலாம்

நிறைய எழுதலாம் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன் ..இதைப்பற்றிய விவாதங்கள் தொடரும் போது மேல் கொண்டு பேசலாம் என்று இருக்கிறேன்

கருத்துக்களும் திருத்தங்களும் வரவேற்கப்படுகின்றன.