Wednesday, January 18, 2012

வெடித்தெழும் வித்தை


வெளிச்சத்தை தேடி நகரும்
பசுமை கனவுகளுக்கு
பாறைகளுக்கு அடியில்
தீனீ போடுவது யாரோ
தடைகளை உடைத்தெறிந்து விட்டு
முகத்தை வெளிக்காட்டுகின்றனவே



உள்ளிருந்து வெடித்து
வானத்தை நோக்கி பறப்பதற்காக
காத்திருக்கும் கனவுகளை
தடைகளை பார்த்து பயந்து
கலைத்து விடும் மனிதர்களே
பாறைகளின் அடியில் பதுங்கி
தனது நாளுக்காக காத்திருந்து
இறுக்கங்களை உடைத்து
வெளிவரும் வித்தைகளை
விதைகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்


புகைப்படம் : பேரழகன் பாலா அவர்களின் கை வண்ணம்

அவர் எடுத்த புகைப்படத்தை என்னுடைய வலை பூவில் பயன்படுத்த

வெகுமதி வேண்டா அனுமதி தந்த அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக

Thursday, January 5, 2012

தோழருக்கு ஒரு அன்பு மடல்.....

தோழர் எனக்கு உங்கள மீது எந்த தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது . சொல்லப்போனால் நாம் ரெண்டு பெரும் கருத்தளவில் ஒத்து போகிறவர்கள். அதைவிட மற்றொரு விடயம் நாம் இருவரும் இதுவரை எந்தவித முரண்பாடான விவாதங்களை நடத்தியவர்களும் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெரியாரை பின்பற்ற துடிக்கிறவன் என்றளவில் பலருடனும் கொள்கை ரீதியாக கடுமையாக மோதி இருக்கிற போதிலும் அவர்கள் மீது இதுவரை எந்தவித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியையும் நான் வளர்த்து கொண்டது கிடையாது. சமுதாய அக்கறை இல்லாமல் சுய சாதி, மத, இன, மொழி வெறியோடு பேசுபவர்களை கிஞ்சித்து கூட மனிதத்தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறார்களே என்று எண்ணி வருந்தி தான் இருக்கிறேன். நான் கடுமையாக அடிக்கடி எல்லாருடனும் மோதி கொள்ளும் ஒரு விடயம் பார்ப்பனியம் தான். அது என் மூதாதையர்களின் மொழியும், பண்பாடும், உறவுகளும் பார்ப்பனியத்தால் சின்னாபின்னப்படுத்தபட்டதால் எழுந்த கோபத்தின் விளைவு. அதை பற்றி என்றும் நான் வருந்தியதே கிடையாது. வருந்த போவதும் இல்லை. பார்ப்பனிய வெறியோடு சுற்றுகிற பார்ப்பனர்கள் மீதும் அவர்களுக்கு காவடி எடுக்கும் சொம்பு தூக்கிகளோடும் தான் கடுமையாக கடிந்து சண்டை போட்டிருக்கிறேன். அதே நேரத்தில் நான் பொறுமை காத்த பிறகும் எல்லை மீறி என்னை தனிப்பட்ட முறையில் மோசமாக திட்டிய (பதிலுக்கு நானும் திட்டி இருக்கிறேன் அதை மறுக்கவில்லை) அவர்களில் பலரும் இன்னமும் என் நட்பு வட்டத்தில் தான் இருக்கிறார்கள்.

என்னுடைய முகநூல் நட்பு வட்டத்தில் இருந்து உங்களை நீக்கியதற்கு ஒரே காரணம், சில நாட்களுக்கு முன்பு நான் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில், தங்கள் முகநூல் முகப்பு படமாக சமுதாயத்தின் மீது எந்தவித அக்கறையும் இன்றி இருக்கும் நடிகர்கள் புகைப்படத்தை வைத்துள்ளவர்கள், மற்றும் அத்தகைய புகைப்படங்களுடன் எனக்கு நட்பு வேண்டுகோளை அனுப்புபவர்களை நீக்க போவதாக பதிவு போட்டு இருந்தேன். அதன்படி சில பேரை நீக்கியும் இருந்தேன். அப்படி அதை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நேற்று நடிகர் ரசினியின் புகைப்படத்தோடு உள்ள ஒருவரை என் நட்பு வட்டத்தில் பார்த்தேன் உடனே நீக்கி விட்டேன். நீக்கி நீங்கள் பதில் பதிவு போடும் வரை அது நீங்கள் தான் என எனக்கு தெரியாது. என்னன்னா இதே போல் உங்களுடைய பெயரில் ஏற்கனவே கமல் மற்றும் விசய் போன்றோரின் புகைப்படங்களோடு என் நட்பு வட்டத்தில் இருந்த ஒருவரையும் வேண்டுகோள் அனுப்பிய மற்றொருவரையும் நீக்கி இருந்தேன்.

அதென்னவோ தெரியலை எனக்கு. நல்லவன் மாதிரி தன்னை காட்டிக்கொண்டு திரைப்படங்களிலும், தனக்கு தேவைப்படும் நேரங்களில் மேடைகளிலும் பஞ்ச வசனம் பேசி ரசிகனுங்களை உசுப்பேத்தி கொண்டு, ஒழுங்காக வருமானவரி கட்டாமல் கருப்பு பணத்தை சேர்த்து வைத்து கொண்டு தன்னை ஊழல் எதிர்ப்பு போராளியாக காட்டி கொள்ளும், திரைமறைவில் வில்லத்தனமான வேலைகளில் ஈடுபடும் நடிகனுன்களோட புகைப்படத்தை தங்களுடைய முகப்பில் வைத்திருப்பவர்கள் அமெரிக்க குடியரசு தலைவராகவோ இல்லை உலகின் பெரும் பணக்காரராகவோ இருப்பதை பற்றி எல்லாம் கவலை கிடையாது அவர்கள் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் இருப்பது தான் எனக்கு கவலை தரும் விடயம். நடிகனுங்க பின்னால் சுற்றுபவர்களுக்கு சமூக அக்கறை இருக்கும் என்ற பகல் கனவுகளை எல்லாம் நான் காண்பது இல்லை. வேண்டும் என்றால் அந்த தறுதலைகளை போல இவங்களும் சமூக அக்கறை உள்ளவர்கள் போல நடிக்கலாம் என்பது என் மனதில் ஆழமாக பதிந்து விட்ட ஓன்று.

என்னை பொறுத்தவரையில் அடுத்த தலைமுறைக்கு நாம் வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் ஒரு எடுத்துக்கட்டாகவாவது இருக்க வேண்டும். அதற்காக பெரியார் போன்ற சமூக போராளிகளை போல் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று கூட வேண்டாம். ஏனெனில் இப்போதெல்லாம் 15, 16 வயதில் உள்ள விடலை பசங்க சமூக வலைத்தளங்களை அதிகம் பாவிக்கிறார்கள். அந்த பசங்க நம்மை பார்த்து திரைப்பட நடிகர்கள் மீதான மோகத்தில் இப்ப இருக்கிற நிலைமையை கட்டிலும் மோசமான நிலைமைக்கு செல்ல நாம் காரணமாக இருந்து விட கூடாது. சினிமா நடிகர்களை பின்பற்றுவது ஒரு மரியாதைக்குரிய செயலாகவோ இல்லை மற்றவர்களிடம் தங்களுக்கு மதிப்பு ஏற்படுத்தும் செயலாகவோ இனி வரும் தலைமுறைகள் நினைக்க கூடாது. எவ்வளவோ சிறுவர் சிறுமியர்கள் சினிமா மோகத்தால் தாங்கள் படிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து இருக்கிறார்கள். செய்திதாள்களில் அடிக்கடி பார்க்கலாம் நடிகனை, நடிகையை காண ஊரில் இருந்து நகரத்திற்கு வந்து விழி பிதுங்க நின்ற சிறுவர் சிறுமியர்கள் மற்றும் திரைப்பட மோகத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கல்லூரி, பள்ளிக்கூடங்களில் பயிலும் இளம் பெண்களை பற்றி. அப்படி கடந்த காலங்களில் செம்மறியாட்டு மந்தையாக சுற்றி வாழ்க்கையை வீணாக்கியவர்களில் நானும் ஒருவன். மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார், கர்மவீரர் காமராசர், சேகுவேரா போன்றார் எனக்கு அறிமுகமாகிய போது அந்த போதையில் இருந்து விடுபட்டு விட்டேன்.

ஒரு தந்தையானவன் புகைப்பழக்கத்திற்கோ, அல்லது குடிக்கோ அடிமையாகி அதிலிருந்து விடுபட நினைத்தும் சூழ்நிலைகளின் விளைவாக அதில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய குழந்தையின் முன்பு புகை பிடிக்கவோ இல்லை குடிப்பதையோ செய்யாமல் தன்னை கட்டுபடுத்தி கொள்வதன் மூலம் தன்னுடைய குழந்தையை தான் விழுந்த குழியில் விழுந்து விடாமல் தடுக்கலாம். அவ்வாறில்லாமல் தன்னுடைய குழந்தைகள் முன்பு எவ்வித சுய கட்டுப்பாடும் இன்றி அவ்வாறான செயல்களில் ஈடுபடுவ்து அயோக்கியதனமின்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

எனக்கு மத, சாதி, இன ,மொழி வெறியர்கள் எனது நட்பு வட்டத்தில் இருப்பது பற்றி கூட கவலை படமாட்டேன். அவர்களோடு விவாதிப்பதால் நமது விவாத திறமையாவது வளரும் . ஆனால் திரைப்பட நடிகர்களை கொண்டாடுபவர்களிடம் பேசுவதையே தவிர்ப்பவன். அப்படியான சில நேரங்களில் சில நல்ல நட்புகளை கூட இழக்கலாம் . வேதனையாக தான் இருக்கிறது . ஆனா நம்ம பாட்டன் ராமசாமி அப்படி கிடையாதே கொள்கைக்காக உறவுகளையே தூக்கி எறிந்தவனல்லவா. அவனுடைய பேரனாக என்னை காட்டி கொள்ள முயலும்போது இப்படியான சூழ்நிலைகள் வந்து விடுகிறது.

சில நேரத்தில் நாம் இவ்வாறு கூட நினைக்கலாம், உதவி செய்பவரை, அவர் கெட்டவராக இருந்தாலும், நன்றியோடு நினைப்பது தமிழர் பண்பாடல்லவா, அதை செய்வதால் நாமும் கெட்டவராகி போய் விடுவோமா என்று. ஒரு அயோக்கியனிடம் தன்னுடைய இக்கட்டான நிலையில் உதவி வாங்கியவர் கெட்டவராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை . அதே நேரத்தில் அந்த நல்லவர் தனது அறியாமையால் அந்த அயோக்கியனை தூக்கி சுமப்பதால் அந்த அயோக்கியன் நல்லவனாகி விடமுடியாது. ஊரை அடித்து உலையில் போட்டு கொண்டு திரியும் வேடதாரியிடம் உதவிக்காக போய் நிற்பது சுயமரியாதையை காக்கும் செயல் அல்ல. அது நம்மை நாமே மற்றவர்க்கு அடிமையாக விற்று போடும் தான் தோன்றித்தனத்தின் முதல் படி. அதற்காக மற்ற எல்லாரும் யோக்கியர்கள் என்று கூறி விட முடியாது ஆனால் யோக்கிய வேடம் பூண்டு கொண்டு அயோக்கியதனத்தில் ஈடுபடுபவனை எல்லாம் தலைவனாக்குவதும் அவனின் புகழ் பாடுவதும் அசிங்கத்தின் உச்சம். காமகொடூரன் ஒருவன் பத்து பதினைந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி விட்டு பிறிதோர் பொண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறேன் என்று கூறும்போது அந்த பெண்ணின் வீட்டார் அந்த கயவாளியை ஏற்று கொண்டு புகழ்வதில் சுயநலம் இருக்குமே ஒழிய சமூக அக்கறை எல்லாம் இருக்காது. அவர்களால் சமூகத்தை பற்றி சிந்திக்கவும் முடியாது. அவர்கள் தாங்கள் மனத்தை தாங்களே ஊனமாக்கி கொள்கிறவர்கள்.

இப்படியான ஒரு எண்ண கொந்தளிப்பில் இருந்த எனக்கு, சமூகத்தை தன்னுடைய சுய நலத்திற்க்காக பயன்படுத்தி கொண்டு அதன் மீது எந்த அக்கறையும் இல்லாமல் திரியும் நடிகனின் புகைப்படத்தை முகநூல் முகவரியின் முகப்பு படமாக வைத்து இருந்தை பார்த்தவுடன் அதன் சொந்தகாரர் யார் என்று சிறிதும் கூட யோசிக்காமல் என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து தூக்கி விட்டேன். கடைசியில் தான் தெரிந்தது அது தாங்கள் என்று.

நான் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய படத்தையோ இல்லை நான் பெரிதும் நேசிக்கும் சமூக போராளிகளான மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், சேகுவேரா, என்று எவருடைய புகைப்படத்தையும் முகப்பு படமாக வைத்ததில்லை. அவ்ர்களைது புகைப்படத்தை வைத்து தான் அவர்களது கொள்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும்என்றோ அவர்களை மரியாதை செய்யும் செயல் என்றோ படம் காட்டுகிற எண்ணங்கள் நமக்கு வருவதில்லை. மக்களுக்கு செல்ல வேண்டிய செய்திகளை தான் முகப்பு படமாக வைத்து வருகிறேன். மேலும் என்னுடைய பாட்டங்கலான சமூக போராளிகள் தங்களுடைய வாழ்க்கையை ஒறுத்து பெற்று தந்த சமூக நீதியின் மூலம் கல்வி கற்று முன்னுக்கு வந்த எனக்கு சமூக வலைத்தளத்தை ஒரு பொழுது போக்கு சாதனமாக வைத்து கொள்ள விருப்பமில்லை. எமக்கு கிடைத்த விடுதலையை என்னிடம் இருந்து தட்டி பறிக்க தொலைகாட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் மூலம் அரக்க பலத்தோடு மோதும் பர்ப்பனியத்தை எதிர்த்து நிற்க எனக்கு கிடைத்த இது போன்ற சிறு துரும்பை ஆயுதமாக வைத்து கொண்டு எம்முடைய பாட்டனார்கள் தொடங்கி வைத்த போரை தொடர்ந்து வருகிறேன். அது கடைமட்ட மனிதன் விடுதலை பெரும் வரை தொடரும்.

இப்போது சொல்லுங்கள் நான் செய்தது தவறா என்று. ஆனால் உங்கள் முகப்புப்படமாக இருந்த அந்த நடிகனின் புகைப்படத்தை நீங்கள் நீக்கியது, சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். அந்த மகிழ்ச்சியில் உங்களோடு மறுபடியும் கைகோர்க்க எனது கரத்தை உங்களை நோக்கி நீட்டுகிறேன். வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

இப்படிக்கு

ஏற்றத்தாழ்வற்ற தோழமையுடன்

அந்தோணி

மேலேயுள்ள கட்டுரை ஒரு நடிகனின் புகைப்படத்தை தன்னுடைய முகநூல் முகப்பு படமாக வைத்திருந்த தோழரை என் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கி இருந்தேன். அது அவரை எவ்வகையிலும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை அவருக்கு விளக்க எண்ணி வரைந்த மடலாக இதை படைத்து இருக்கிறேன்.

ஏனைய தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் திரைப்படங்களை பாருங்கள் , விமர்சியுங்கள். ஒரு நடிகன் சமூக அக்கறையோடு ஏதவாது சொன்னால் பாராட்டுங்கள். ஆனால் சமூக போராட்டத்தில் முழு ஈடுபாட்டோடு அவர்கள் கலந்து கொள்ளாதவரை அவர்களை தூக்கி சுமக்காதீர்கள். அப்படி செய்வீர்களானால் அது உங்களுக்கும் நல்லது உங்களை சுற்றி வளரும் அடுத்த தலைமுறைக்கும் நல்லது

Wednesday, January 4, 2012

மலையாளிகள் தமிழர்களுக்கு எதிரானவர்களா ?

கொஞ்ச நாட்களாக தமிழ் தேசியம் பேசுபவர்களிடையேயும், கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் ஈழ ஆதரவாளர்களிடையேயும் அது ஈழப்பிரச்சினையானாலும் சரி தற்போது வெடித்து இருக்கும் முல்லை பெரியார் பிரச்சினையாக இருந்தாலும் சரி எல்லா விதமான தமிழர் விரோத செயல்பாடுகளுக்கு மலையாளிகள் தான் காரணம் என்று ஒட்டு மொத்த மலையாளிகளையும் கட்டம் கட்டும் ஒருவித வினோதமான மனப்பான்மை நிலவுகிறது. இத்தருணத்தில் மலையாளிகள் என்றால் யார் அவர்கள் எப்படி உருவானார்கள், ஒட்டுமொத்த மலையாளிகளின் குரலாய் யார் தம்மை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி ஏன் எண்ணத்தில் ஏற்பட்டதன் விளைவே இந்த பதிவு.


இரண்டு மூன்று நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மலையாளிகளின் வீடுகளில் தமிழ் தான் பேசப்பட்டது. தமிழ் மன்னர்களில் ஒருவர்களாகிய சேர மன்னர்களால் ஆளப்பட்ட நிலப்பரப்பு தான் இன்றைய கேரளா. பண்டைய தமிழகத்தில் மிகச்சிறந்த துறைமுக பட்டினங்களில் ஒன்றாக விளங்கிய முசுரி (தற்போதைய எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ளது) அந்த காலத்தில் கிரேக்க, ரோம, அராபிய நாடுகள் என பன்னாடுகளோடும் வியாபார தொடர்பு கொண்டிருந்த பட்டினமாய் இருந்தது. யூதர்கள் அராபியர்கள், கல்தேயர்கள் என பல நாட்டவரும் வியாபாரத்திற்காக போய் வந்து கொண்டிருந்த பூமி தான் அது. இப்படி பல நாட்டவர்கள் வந்து போய் கொண்டிருந்தாலும், அவர்கள் அங்குள்ள பூர்வீக குடிகளோடு கலந்திருந்தாலும் அது சேர தமிழ் மக்களுடைய பண்பாட்டை சிதைத்து விடவில்லை. சேர பூமியில் பேசப்பட்டு வந்த தமிழில் அராபிய, கல்தேய, கீப்ரு போன்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளை உட்கொள்ளப்பட்டு இருந்தாலும் தமிழ் தனது தனித்தன்மையை இழக்காமல் தான் இருந்தது. ஆனால் எட்டாவது நூற்றாண்டை ஒட்டிய வாக்கில் மேற்கு கடற்கரை வழியாக வடக்கில் இருந்து சேர பூமியில் நம்பூதிரிகள் என்று வழங்கப்பட்ட பார்ப்பனர்கள் உட்புகுந்த பிறகு சேர மண்ணின் வரலாறே மாறிப்போனது. மன்னர்களை தந்திரமாக தாங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள் பின்பு மன்னர்களை கொண்டே பூர்வீக குடிகளின் உரிமைகளை பறிக்க தொடங்கினார்கள். பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கிய சேர மண்ணில் பார்ப்பனியம் தனது நஞ்சை கலக்க ஆரம்பித்தது. பார்ப்பனியம் ஒரு இனத்தை அழிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் தலையாய தந்திரமே அந்த இனத்தின் மொழியை சிதைப்பது தான். அப்படி தான் சேர மண்ணில் பேசப்பட்ட தமிழின் வட்டார வழக்குக்கும் பார்ப்பனிய வெறியர்களால் சிதைக்கப்பட்டது.


தமிழ் பேசிய சேர மக்கள் ஒடுக்கப்பட்டு கல்வி பயில தடை செய்யப்பட்டனர் . சேர நாட்டில் இடைக்காலத்தில் கல்வி என்பது பார்ப்பனிய வெறியர்களின் தனி உடமை ஆக்கப்பட்டது . அவர்கள் அன்றைய சேர வட்டார தமிழில் சமசுகிருதத்தை கலந்து அந்த வட்டார வழக்கை சோழ, பாண்டிய மண்ணில் வழங்கப்பட்ட தமிழில் இருந்து அன்னியப்படுத்தினர். பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பயிலும் வாய்ப்புகளை பெற்றபோது அவர்களும் பார்ப்பனியர்கள் உருவாக்கி உலவவிட்ட மணிப்பிரவாளத்தில் தான் கல்வி கற்க முடிந்தது. அந்த மணிப்பிரவாளம் தான் நவீன மலையாளமாக திரிந்து போனது. இன்றும் கேரளாவில் வாழும் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்கள் பண்டைய தமிழை ஒத்த வழக்கை தான் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பார்ப்பனியத்தால் சிதைக்கப்பட்ட தமிழின் வட்டார மொழி வழக்கின் அடையாளம் தானே இன்றைய மலையாளம். பொது எதிரியை கண்டுக்காமல் விட்டால்.... நாளைக்கே தமிழ்நாட்டிலும் ஆந்திராக்களும், கேரளாக்களும் உருவாகலாம்.


கேரளத்தில் ஒடுக்கப்பட்ட சக மலையாளியை சுரண்டும் பார்ப்பனிய வெறியர்கள் தான் மலையாளி என்ற முகமூடியை அணிந்து கொண்டு முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக ஏனைய மலையாளிகளை தூண்டி விடுகின்றனர். கேரளாவில் உள்ள காடுகளை அழித்து அங்கு வாழும் பழங்குடிகளின் நிலங்களை அபகரித்து ஆட்டம் போடும் பார்ப்பனிய வெறியர்கள் தான் ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் என்பது பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? ஒருத்தர் கேட்கிறார் கேரளா பூர்வீக வாசிகள் ஏன் அந்த பார்ப்பன வெறியர்களை எதிர்த்து இதுநாள் வரை போர் செய்யவில்லை ஏன் ஆயிதத்தை எடுக்காமல் குறைந்த அளவுள்ள பார்பனர்களுக்கு அடிமையானார்கள்?.. என்று, அது தான் பார்ப்பனியத்தின் தந்திரம், சாதி கட்டமைப்பை பலப்படுத்தி அதை சாதித்து கொண்டார்கள். அப்படி தங்களது ஆதிக்கத்தை நிலைப்படுத்த நம்பூதிரி பார்ப்பனர்கள் தங்களுக்கு அடிமைகளாக வைத்து கொண்ட பூர்வீக குடிகளை சேர்ந்த பெண்களின் மூலம் உருவாக்கப்பட்ட பார்ப்பனிய கோவணங்கள் தான் இந்த நம்பியார், நாயர், மேனன் போன்ற ஆதிக்க சாதியினர். இவர்களை கொண்டு தான் பார்ப்பனியம் ஏனைய பூர்வீக குடிகளின் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. அவர்கள் தான் இன்றளவிலும் தமிழர்களுக்கு எதிரான எல்லாவிதமான சதிகளில் ஈடுபடுபவர்கள்.
தமிழகத்திலும் கிட்டத்தட்ட அந்த நிலை தான் நேர்ந்திருக்கும். ஆனால் பார்ப்பனியத்தால், இந்துவத்தால் உள்வாங்கப்படமுடியாத பெரியார் போன்ற சமூக போராளிகள் எவ்வித சமரசமுமின்றி பார்ப்பனியத்திற்கு எதிரான போரை தொடர்ந்ததால் இங்கு நிலைமை அந்த அளவிற்கு மோசமடையவில்லை. அப்படி இருந்துமே கூட இன்றைக்கு தமிழ்நாட்டின் அதிகார மையம் குடுமிகளிடம் தான் போய் சேர்ந்து இருக்கிறது. இந்தியாவிலேயே சாதியகட்டமைப்பு வேறு எந்த இடங்களையும் விட மோசமாக இருந்தது என்று சொன்னால் அதில் ஓன்று கேரளா, மற்றொன்று வங்காளம். அது என்னவோ தெரியல ரெண்டு மாநிலங்களிலும் காங்கிரசு மற்றும் போலி பொதுவுடைமை கட்சிகளின் அரசாட்சி தான் இதுவரை மாறி மேரி நடந்து இருக்கிறது. ரெண்டு கட்சியிலேயும் தலைமை பீடங்களில் இருப்பவர்கள் பார்ப்பனிய வெறியர்கள் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.


தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கபட்ட சமூகங்களிலும் ஒடுக்கபட்ட சமூகமாக இருந்த சாணார் இன மக்கள் மீது இதே நாயர், மேனன், நம்பியார் போன்ற பார்ப்பனிய வெறியர்கள் தான் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார்கள் என்பது யாருக்காவது தெரியுமா ?. சாணார் சமூக பெண்கள் மார்பு சட்டை அணிய கூடாது என்றும் பார்ப்பனிய வெறியர்கள் நேரில் வந்தால் தோள் சீலையை ஒதுக்கி மார்பை காட்ட வேண்டும் என்று கொடுமை இழைத்தவர்கள், இன்று ஈழத்திற்கு எதிராக செயல்படும் பார்ப்பனிய வெறியர்களின் மூதாதையர்கள் என்பது தெரிந்து இருந்தால் இவ்வாறு பேசமாட்டார்களோ என்னவோ. தமிழனுக்கு கடந்த காலங்களில் பார்ப்பனியம் தமிழரின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை எவ்வாறெல்லாம் சீரழித்தது என்று தனியாக பாடம் எடுத்தல் அவசியம் என்று தோணுகிறது. பார்ப்பனிய வெறியர்களோடு கேரளாவில் மற்றொரு கூட்டமும் செயல்படுகிறது.அவர்கள் தங்களை சிரியன் கிருத்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் ஒரு கூட்டம். இவர்கள் தங்களுடைய மூதாதையர்கள் சிரியாவில் இருந்து வந்தவர்கள் எனவும், கிருதுவின் சீடர் தொமாவல் மதம் மாற்றப்பட்ட நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் எனவும் கதை விட்டு கொண்டு அலைகிற கூட்டம். இனக்கலப்பு நடந்திருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த கூட்டமும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் கதை விடுவது எல்லாம் அதிகப்படியானது. இதே போல் தான் தான் மலபார் கடற்கரையோரங்களில் வசிக்கும் இசுலாமியர்களும் தங்கள் மூதாதையர்கள் அராபிய தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறும் வழக்கம் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் வியாபரத்திற்காக வந்த அரபியர்கள் முக்குவர் மற்றும் ஏனைய பூர்வீக குடிகளின் பெண்களை மணந்து அக்குடிகளோடு ஒன்றற கலந்து விட்டிருந்தார்கள். தற்போது அவர்கள் தங்களை மாப்பிளா இசுலாமியர்கள் என்று அழைத்து கொள்கிறார்கள். அது பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.


மலையாளிகள் எங்கு சென்றாலும் மலையாளிகளோடு தான் இணைவார்கள்...
மலையாளிகளுக்கு தான் உதவுவார்கள் என்பது மாதிரியான ஒரு மாய பிம்பத்தை கேரளாவில் உள்ள பார்ப்பனிய வெறியர்கள் வெளியுலக கண்களுக்கு முன்னால் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அது அது அங்குள்ள ஒடுக்கப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவர்கள் இழைக்கும் அநீதிகள் வெளியுலகை எட்டாமல் இருப்பதற்காகவும், அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒட்டு மொத்த மலையாளிகளின் குரல் என வெளியுலகை நம்ப வைக்கவும் செய்யும் தந்திரம். உண்மை என்னவென்றால் நாயர், நம்பூதிரி, மேனன், நம்பியார் போன்ற பார்ப்பனிய வெறியர்கள் உதவி செய்யும்போது உதவியை பெறுபவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து மட்டுமே உதவி செய்வதில் கைதேர்ந்தவர்கள். வெளி நாட்டில் வேலை செய்யும் என்னுடைய சகோதரியோடு வேலை பார்த்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு மலையாள சகோதரியை சிரியன் கிருத்துவ, மற்றும் பார்ப்பனிய வெறியர்கள் மோசமாக நடத்தியதை என்னுடைய சகோதரி என்னோடு பகிர்ந்து இருக்கிறார். அப்படி பட்ட அவமானங்களுக்கு பயந்து அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மலையாளிகள் அந்த ஆதிக்க வெறி பிடித்த வெறியர்களுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. பொதுவாக அவர்கள் தங்களுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு தான் அவர்களோடு இருப்பார்கள்.


ஒரு கூட்டம் தமிழர்கள் மலையாளிகள் தமிழர்களை "பாண்டி" "கரிதொட்டி" என்று தன் இழிவுபடுத்துகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழுதாம், தமிழ் திரைப்படங்களில் கருப்பு நிறத்தவர்களை கேலிக்குள்ளாக்கும் கதாபாத்திரங்கள் தானே நிறைந்து காணப்படுகின்றன. எத்தனை தமிழர்கள் தமிழ்படங்களில் கதாநாயகிகள் கருப்பாக இருப்பதை விரும்புவார்கள். தாங்கள் வாழும் சமூகத்தை பிரதிபலிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் கூட வெள்ளைத்தோல் அழகிகளை தானே தேடுகிறது அவர்களின் கண்கள். சக தமிழர்களை இழிவுபடுத்தும் கருங்காலிகள் தானே இங்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அப்படி இழிவு படுத்தும் கூட்டத்தை உச்சத்தில் தூக்கி வைத்ததால் தானே ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு தமிழன் அமைச்சராக பதவியேற்கும் போது மேடை பயத்தால் ஏற்பட்ட சிறு தவறை அவையில் எல்லார் முன்னாடியும் கெக்கேலி கெட்டி சிரித்து மகிழ்ந்தது. அப்போது இந்த தமிழர்கள் எங்கே போனார்கள்.


‎தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் ஒரு மலையாளியை காட்டுங்கள் பார்ப்போம் என்று பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கேரளாவில் மொத்த ஊடகமும் பார்ப்பனிய வெறியர்களின் கையில் தான் உள்ளது. பார்ப்பனியம் தனது ஊடக பிரச்சாரத்தின் மூலம் சாதாரண மலையாளிகளிடமும் தமிழர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி விட்டு இருப்பதே அதன் மூல காரணம் என்கிற உண்மை பல பேருக்கு உரைப்பதில்லை. கேரளா என்றல்லாது இந்திய அளவில் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் ஊடக தளத்தில் அரக்க பலத்தோடு அவர்கள் வீற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அந்த நிலையை நோக்கி தான் போய் கொண்டு இருக்கிறோம். நாம் பார்ப்பனியத்திற்கு எதிரானாக போரை துவக்காமல் மலையாளி தெலுங்கன், கன்னடன் என்று சுற்றி கொண்டு இருந்தால் இங்கேயும் பார்ப்பனியம் அந்த நிலையை கொண்டு வந்து விடும். இப்பவே கூடங்குளம் அணுமின் நிலையம் ஈழ பிரச்சினை போன்ற விடயங்களில் பார்ப்பனியம் தமிழர்களுக்கு எதிரான போரை இந்திய தேசிய முகமூடியை போர்த்தி கொண்டு நடாத்தி கொண்டு இருக்கிறது. அவர்கள் நம்மோடு மிருக பலத்தோடு மோதி கொண்டு இருக்கிறார்கள்.... நாம என்னடான்னா சுத்தி வளைச்சு ஓடி கொண்டு இருக்கிறோம்.


அதே போல மலையாளிகள் வர்க்க சிந்தை உடையவர்கள் என்ற போலி பிம்பமும் பார்ப்பனிய வெறியர்களால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கேரளாவில் வர்க்க சிந்தை கொண்ட போராளி வர்கீசை அவருடைய இளம்பிராயத்தில் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் படுகொலை செய்ததோடு அதற்கும் மூடு விழா நடத்தப்பட்டு விட்டது . தற்போது அங்கு பேசப்படும் வர்க்க அரசியல் எல்லாம் சும்மா லூலாயிக்கு... அங்குள்ள உயர்மட்ட போலி பொதுவுடைமை வியாபாரிகளை கொஞ்சம் உற்று கவனித்தால் அவர்கள் அனைவரும் பார்ப்பனிய வெறியர்களாக தான் இருப்பார்கள்.


முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சமூக வலை தளங்களில் பேசி வரும் கேரளத்தவர்களில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த தோழர்கள் அதிகம். ஆனால் சமூக வலைத்தளங்களில் அவர்களின் பங்கேற்பு பார்ப்பனிய வெறியர்களை காட்டிலும் எண்ணிக்கையில் மிக குறைவு. சமூக தளங்களில் ஒட்டு மொத்த மலையாளிகளுக்கு எதிராக போராடாமல் பார்ப்பனியத்தால் நசுக்கப்படும் மலையாளிகளோடு கூட்டாக சேர்ந்து போராட வேண்டும்.


தனித்தமிழ்நாடு வேண்டும் என்பதெல்லாம் சரி தான், ஆனால் சுற்றி இருக்கிற பயபுள்ளைங்க எல்லாரையும் எதிரியாக்கி வைத்து கொண்டு, நாம ஒற்றுமையாக இருந்தாலும் ஒன்னும் நடக்க போறது இல்லை. நம்முடைய போராட்டம் தமிழர்களுடைய சுயமரியத்தைக்கான போராட்டம் என்பதோடு மட்டுமல்லாமல். தமிழர்களை சிதைத்து பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்ட தேசிய இனங்களில் பார்ப்பனியத்தால் அடிமைபடுத்தி வைக்க பட்டு இருக்கும் மக்களுக்காகவும் போராடுவதே உயர்ந்த லட்சியமாக இருக்க முடியும்


கீழே சில காணொளிக்கான இணைய இணைப்புகளை தருகிறேன் பாருங்கள்

all indians are part 0௧


all indians are part 0௨


all indians are part ௩


all indians are part 04

Tuesday, January 3, 2012

மாட்டுக்கறியும் கொலை வெறியும்

சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றில் ப.சா.க என்ற பார்ப்பனிய மதம் பிடித்த கட்சி ஆளும் இந்தியாவின் மத்திய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் பசுமாட்டை கொல்வது, அதற்கு தொடர்பான வணிகங்களில் ஈடுபடுவோர் மீதும் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கலாம் என்று சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. அதை படித்த பொழுது 80 விழுக்காடு மக்கள் இறைச்சியை தங்கள் உணவில் ஒன்றாக கருதும் இந்தியாவில் பசுமாட்டின் மீது மட்டும் ஏன் இந்த தனி பாசம், ஏனைய மிருகங்களை கொல்வோர் மீதும் ஏன் இந்த சட்டம் பாய கூடாது. இந்தியாவின் காடுகளில் மறைந்து விடும் நிலையில் இருக்கும் மான், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவதும் அது சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பது சட்டப்படியான குற்றம் என்று தெரிந்த பின்பும் இந்தியாவில் பெருகி வரும் போலிச்சாமியார்கள் அமர தேவைப்படும் மான் மற்றும் புலியின் தோல்களுக்காக அவற்றை வேட்டையாடுபவர்கள் சுதந்திரமாக உலவ மாட்டின் இறைச்சியையும் , தோலையும் தாங்கள் உணவு பொருளாதார தேவைகளுக்காக பயன்படுத்தும் மக்களின் மீது மட்டும் புதுசு புதுசாக சட்டம் பாய வேண்டும்.


பார்ப்பனிய சக்திகளுக்கு மாட்டின் மீது மட்டும் ஏன் தனி அன்பு பொத்து கொண்டு வருகிறது. அதிலும் எவ்வளவோ வகையான மாடுகள் இருக்க பசு மாடு மட்டும் எப்படி அவர்களுக்கு புனிதமானது ? அவர்கள் மாட்டை தாங்கள் வீடுகளில் கட்டி வளர்க்கிறார்களா இல்லை கிராமப்புறங்களில் மாடு கட்டப்பட்டுள்ள தொழுவங்களுக்கு சென்று அவற்றை சுத்த்ப்படுத்துகிறார்களா ? வேதத்தில் மாட்டிறைச்சியையும், குதிரை இறைச்சியையும் போட்டி போட்டு கொண்டு தின்றதாக குறுப்பிடப்பட்டு இருக்கும் கூட்டம் என்றைக்கு சைவ பிரியர்களானார்கள் ? இதி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் புத்த சமண மத கோட்பாடுகளையும் அவை தோன்றியதற்கான காரணங்களையும் , அக்காலத்தில் இந்த துணை கண்டத்தில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களின் பண்பாட்டு கூறுகளையும் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாக இருக்கிறது.

சிந்து சமவெளி சமூகம் தங்களுக்கிடையே எந்த வித போர் வெறியும் கொள்ளாமல் ஆற்றின் ஓரங்களில் மண்ணை பண்படுத்தி விவசாயம் செய்து கொண்டும் கடலில் ஆறு கலக்கும் ஆற்றின் முகத்துவாரங்களில் மீன் பிடித்து கொண்டும், தேவைப்பட்ட நேரங்களில் வேட்டையாடியும் தங்களுக்கென நகரை நிறுவி அதை காட்டு மிருகங்களிடம் காக்க சுற்றி கோட்டை கட்டியும் வாழ்ந்த நாகரீகத்தில் முன்னேறிய சமூகமாயிருந்தது. வாழ்க்கை செழுமையாக இருந்ததால் என்னவு அவர்கள் போர்க்கலைகளில் அவ்வளவு ஆர்வம காட்டி இருக்கவில்லை. ஆனால் நாடோடிகளாக திரிந்த ஆரிய கூட்டத்திற்கு கொளையடித்து தான் அடுத்த நாளை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆக இயற்கையிலேயே நர மாமிசம் உண்பவர்களாகவும் மூர்க்கர்களாகவும் இருந்தார்கள். அப்படி பட்ட ஒரு வெறி பிடித்த கூட்டத்தின் கண்களிடம் ஒரு செழுமையான நாகரிகம் மாட்டி கொண்டால் அதன் நிலை என்னவாகும் என்பதற்கு ரொம்ப சிந்திக்க வேண்டாம்.


காலப்போக்கில் வந்தேறி கூட்டத்திடம் வீழ்ந்த மண்ணின் மக்களில் ஒரு கூட்டம் வந்தேறி கூட்டத்திடம் அடிமைகளாகி போனார்கள், மற்றோரு கூட்டம் மறுபடியும் தெற்கு பகுதி நோக்கி நகர்ந்தது. பிறிதோர் கூட்டம் காடுகளில் புகுந்து வனகுடிகளாக மாறி போயினர். காலபோக்கில் வந்தேறிகளிடம் அடிமையாய் இருந்த கூட்டத்திற்கும் வந்தேறி கூட்டத்திற்கும் இனக்கலப்பு அதிகமாக ஏற்பட அதை தடுக்க ஏற்பட்டது தான் சாதிய கட்டமைப்பும், அதை மீறுபவர்களுக்கான தண்டனை பற்றிய மனுவின் அரக்கத்தனமான கையேடும்.


உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்த வந்தேறி கூட்டத்தின் ஆட்டம் அதிகமான போது புத்தர் மகாவீரர் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றினார்கள். இவ்விருவரையும் கடவுளாக்கி அவர்களின் கொள்கை மழுங்கடிக்கப்பட்டது என்பது வேறு விடயம். ஆக வந்தேறி கூட்டத்தால் உழைக்கும் குடிகளான மண்ணின் மைந்தர்களின் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறை தான் புத்த, சமண கோட்பாடுகளின் உருவாக்கத்தின் அடிப்படை.

அன்றைய கால கட்டத்தில் வந்தேரிகளான பார்ப்பனர்கள் தாங்கள் யாகங்களில் பலியிடுவதற்காக ஆடுகளையும் மாடுகளையும் உழைக்கும் மக்களிடம் இருந்து அரசர்கள் மீத தாங்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை பயன்படுத்தி பறிக்க ஆரம்பித்தனர். அந்த யாகங்களில் கொல்லப்படும் ஆடுகளையும் மாடுகளையும் பார்ப்பனர்கள் உண்டு மகிழ்ந்து கொண்டு இருக்க உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரமான ஆடுகளையும் மாடுகளையும் இழந்து பொருளாதாரத்தில் அடிமட்ட நிலைக்கு சென்று கொண்டு இருந்தனர்.

இது போன்ற கொடுமைகளை கண்டு கொதித்தவராய் உலகின் முதல் பகுத்தறிவாளர் புத்தர் தன்னுடைய பகுத்தறிவு போரை பார்ப்பனிய விபச்சாரத்திற்கு எதிராக துவக்கினார். அவர் தான் உண்மையில் உயிர் வதை கூடாது என்று போதித்தவர். ஆனால் அவர் எப்போதும் இறைச்சி உன்ன கூடாது என்று சொல்லவில்லை. அவரது கொள்கையின் படி உயிருள்ள மிருகத்தை கொன்று தின்ன கூடாது, ஆனால் இயற்கையாக இறந்த மிருகத்தையோ இல்லை வேறு ஒரு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையோ சாப்பிடலாம். அந்த காலத்தில் பார்ப்பனியர்கள் கஞ்சா அடித்து கொண்டும், சோம பானம் என்னும் மது அருந்தி கொண்டும் பசு மாட்டை கொன்றுதின்று கொண்டும் திரிந்தவர்கள்..


புத்தரும் கூட பல இடங்களில் பார்ப்பனர்கள் நடத்தும் யாகங்களில் மிருகங்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தும் பரப்புரை செய்ய ஆரம்பித்தார். பார்ப்பனர்கள் தாங்கள் வளர்த்த யாகங்களில் குதிரைகளையும், மட்டையும், ஆட்டையும் கொன்று குவித்து கொண்டிருந்தபோது மாட்டையும், ஆட்டையும், நிலத்தையும் நம்பி வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்த குடிமக்களுக்கு புத்தரின் கொள்கைகள் பிடித்து போய் அது அவர்களின் மண்களில் ஆழ வேரூன்ற ஆரம்பித்தது. மக்களின் மனங்களில் ஏற்பட்ட புரட்சி ஆண்டவர்களையும் மாற்றத்தை நோக்கி நடைபோட வைத்தது. அதுவரை அரசர்களை ஒட்டியும், நக்கியும் பிழைத்து கொண்டிருந்த பார்ப்பனர்களின் பொழைப்பில் மண் விழ ஆரம்பித்தது. இப்படியாக புத்த சமண கொள்கைகள் மக்களிடம் வேகமாக பரவ ஆரம்பித்த காலத்தில் புத்த, சமண கொள்கைகளோடு நேரடியாக மோத முடியாத பார்ப்பனியர்கள் புத்த மாதத்திற்குள் ஊடுருவதும்
, புத்த மதத்தின் கொள்கைகளில் திரிபுகளை ஏற்படுத்தவும் ஆரம்பித்தனர் .... கால போக்கில் புத்த மதத்தை எதிர்க்க அவர்கள் புத்த மத கொள்கைகளில் ஒன்றான உயிர் வதை தடுப்பை ஏற்று கொண்டு மற்றொரு வழியில் புத்த மத்த கொள்கைகளை எதிர்க்க ஆரம்பித்தனர். அதில் ஓன்று இறந்த மட்டை சாப்பிடும் புத்த கோட்பாட்டாளர்களை ஒடுக்க ஆரம்பித்தனர்.

புத்த மதத்தில் இறந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிட்டவர்கள் புத்த மதத்தின் உயர்ந்த பீடங்களில் குருக்களாக இருந்தவர்கள் தான். புத்த மதத்தவர்கள் உணவிற்காக மிருகங்களை கொல்லாதவர்களாக இருந்த போதிலும் புத்த சமண கோட்பாடுகளை பரப்பும் வேலையில் ஈடுபட்ட அறிஞர் பெருமக்கள் இறந்த மிருகங்களின் உடலை சாப்பிடுவதற்கு தயங்கியதில்லை. புத்தர் கூட இறந்த பன்றியின் உடலை சாப்பிட்டார் என்று புத்த கோட்பாடுகளை தாங்கிய மகாபரிநிபான சுட்டா மற்றும் அங்குட்டாரா நிகாயா போன்ற புத்தகங்களில் பதியப்பெற்றுள்ளது. அதே போல் சமண கோட்பாட்டை தோற்றுவித்த மகாவீரரும் அவருடைய கோட்பாட்டை பினபற்றும் பெண்ணொருத்தியின் கையால் சமைக்கப்பெற்ற கோழி கறியை சாப்பிட்டார் என்றும் சமண கோட்பாடுகளை தாங்கி நிற்கும் புத்தகங்களில் குறுப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அந்த பெண்ணிடம் சமைக்கப்பட்ட கோழியின் இறைச்சி ஏற்கனவே மற்றொரு மிருகத்தால் கொல்லப்பட்டது என்று உறுதி செய்து கொண்ட பின் தான் சாப்பிட்டார் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.

இதே போன்று வைசாலியில் வாழ்ந்த செல்வந்தரான படைத்தளபதி ஒருவர் புத்தருடைய கோட்பாடுகளால் புத்த மதத்தை தழுவிய பின்பு அவர் புத்த பிக்குகளுக்கு தனது வீட்டில் உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் .அப்படி வழங்கப்படும் உணவோடு இறைச்சியும் பரிமாறப்பட்டது. ஆனால் அவர் செய்த காரியம் என்னவென்றால் அந்த இறைச்சி ஏற்கனவே இறந்த மாடுகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று அப்புத்த குருக்களை நம்பவைத்த பிறகே அவர்களை அவ்வுணவை உண்ண வைக்க முடிந்தது. அந்த அளவிற்கு புத்த சமண குருக்கள் தங்களுடைய உணவிற்காக ஒரு உயிர் கொல்ல படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே போன்று குடிமக்களும் தங்களது வீடுகளில் இறந்து போன மிருகங்களை கொண்டு வந்து அவற்றை தங்களது பௌத்த குருக்களின் உணவு பயன்பாட்டிற்காக ஒப்படைப்பது உண்டு. இது போன்ற குறிப்புகளில் இருந்து புத்த சமண கோட்பாடுகளை பின்பற்றியவர்கள் இறைச்சியை உண்பதற்கு எதிரானவர்கள் இல்லை என்பதும் அதே நேரம் அவர்கள் பார்ப்பனியர்களை போல் உயிர்வதைகளில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாக புலப்படும்.

பார்ப்பனியர்கள் புத்த மதத்தின் தூண்களாக விளங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் புத்த கோட்பாட்டை பின்பற்றிய குடிமக்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த எண்ணினர். அது தான் இறந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிடுபவர்களை ஏனைய புத்த கோட்பாட்டை பின்பற்றும் குடிகளால் தீண்டப்படாதவர்களாக மாற்ற அரங்கேற்றப்பட்ட ஆரம்பம்... குடிமக்களுக்கு புத்த கோட்பாடுகளை போதித்து கொண்டிருந்த புத்த கோட்பாட்டின் விலைமதிக்க முடியாத மாணிக்கங்களாக திகழ்ந்த அறிஞர் பெருமக்களை அவர்களுடைய உணவு பழக்கவழக்கத்தை கொண்டே குடிமக்களிடம் இருந்து பிரித்தாழும் சூழ்ச்சி தான் அது. அறிவு எங்கிருந்து சமுதாயத்தை வந்தடைகிறதோ அந்த வழியை அடைத்தால் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தின் கட்டமைப்பை சீர்குலைத்து விடலாம் அல்லவா, அதை தான் பார்ப்பனியம் புத்த கோட்பாடுகளுக்கு எதிராகவும் அதை பின்பற்றும் மக்களுக்கு எதிராகவும் செய்து கொண்டிருந்தது. அதை மட்டுமே பார்ப்பனர்கள் செய்து விடவில்லை புத்த மதத்திற்குள் ஊடுருவி இருந்த மற்றொரு கும்பல் புத்த கோட்பாடுகளை சிதைத்து அவற்றை பார்ப்பனியத்திற்குள் உள்ளடக்கம் செய்ய திட்டங்களை தீட்டி கொண்டிருந்தது. அத்திட்டங்களை செயல் படுத்த அவர்கள் எடுத்த புது பிறவி தான் தங்களை இறைச்சி உண்ணாதவர்களாக மாற்றி அமைத்து கொண்டதும், புத்தரை திருமாலின் மறுபிறவியாக கதை கட்டியதும். இப்போது அவர்களால் இறந்த உயிரினங்களின் இறைச்சியை உண்டு கொண்டிருந்த புத்த அறிஞர் பெருமக்களின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளை எளிதாக முன்னெடுக்க முடிந்தது. அதுவே பார்ப்பனியமாக்கப்பட்ட குப்த மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஏனைய அரசர்கள் காலத்தில் உச்சத்தை தொட்டது

பௌத்த அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த சேரிகள் (இந்த பெயருக்கு மக்கள் சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். அதே போல் இந்த இடங்கள் தான் ஆரம்பத்தில் மக்கள் வசிக்கும் இடங்களின் மையப்பகுதிகளாக இருந்தன) ஏனைய குடிமக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் இடங்களாக மாற்றப்பட்டன. கால போக்கில் புத்த கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றி கொண்டிருந்த அந்த அறிஞர் பெருமக்கள் கல்வி கற்பது தடை செய்யப்பட்டதோடு அவர்களுடைய உரிமைகளும் பிடுங்கப்பட்டன. குடிமக்களிடம் காணப்பட்ட அந்த அறிஞர் பெருமக்களின் மீதான மரியாதை புனைவு செய்யப்பட்ட கதைகளால் சிதைக்கப்பட்டன. இப்போது எந்த குடிமக்கள் முந்தைய காலங்களில் தங்களது வீடுகளில் இறந்த விலங்குகளை தூக்கி கொண்டு வந்து புத்த அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்று அவர்களுடைய உணவிற்காக காணிக்கையாக படைத்தனரோ, அதே குடி மக்கள் பார்ப்பனியத்தால் உள்வாங்கப்பட்ட பின்பு, யார் தங்களுக்கு கடந்த காலங்களில் ஆசான்களாக இருந்தனரோ அவர்களை கொண்டு தங்களது வீடுகளில் இறந்த மிருகங்களை அப்புறப்படுத்த பார்ப்பனர்களால் ஏவப்பட்டனர். இப்படி தான் புத்த மதம் இந்தியாவில் சிதைக்கப்பட்ட கையோடு உயிர் வதையை வெறுத்த புத்த மத துறவிகள் நிறைந்த சமூகம் ஒடுக்கப்பட்டு சமூகத்தின் கடை நிலைக்கு இழுத்து செல்லப்பட்டது.

அதற்கு முன்பு வரை பார்ப்பனர்கள் நடத்திய யாகங்களில் உயிரோடு துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட பசு “கோமாதா” ஆனது

இன்றைக்கு கிராமங்களில் “த்தூத்தேறி” என்ற ஒரு வழக்கு பயன்பாட்டில் உண்டு. அது தமக்கு பிடிக்காத யாரையாவது ஏச வேண்டும் என்றால் அம்மக்களால் பயன்படுத்தப்படுகிற வழக்கு. அது கிட்ட தட்ட “எங்கேயோ இருந்து வந்து எங்க உயிரை வாங்குறியே”, "கேடு கெட்டவனே", என்பது போன்ற பொருளை தரக்குடியது. அந்த சொல் கூட வந்தேறிகளான பார்ப்பனர்களிடம் அடிமைப்பட்டு போன மக்களுக்கு அவர்கள் மீது எழுந்த வெறுப்பின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். அதைப்பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தால் நிறைய விடயங்கள் கிடைக்கலாம்.


இதோடு தொடர்புடைய மற்றொரு பதிவு
Link

௧. பனைமரத்தின் வேர்களுக்கடியில் புதைந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட சரித்திரம்




Sunday, January 1, 2012

பெண்மையின் குறி




பெண்ணே

நீ வீசும் கற்களில்

ஆதிக்கத்தின் அடித்தளங்கள்

நொறுங்கி விழட்டும்

கல்லறைகளில் பூட்டி வைக்கப்பட்ட

உனது சமூகத்தின் சுதந்திரம்

வெடித்து எழும்பட்டும்

கனவுகளை தொலைத்த

உனது தலைமுறையின்

போராட்ட சுவடுகள்

எதிர்கால தலைமுறையின்

வரலாற்று பாடங்களாகட்டும்

பெண்ணே

நீ வைத்த குறியில்

ஆதிக்க தற்குறிகளின்

கோவணங்கள் அறுந்து விழட்டும்

அதில் பெண்மையின் அன்பு

இப்புவியை நிரப்பட்டும்



---- அந்தோணி